நாளை லிங்கா இசை வெளியீடு... திரையுலகினர் திரள்கிறார்கள்!
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை காலை 10 மணிக்கு சத்யம் திரையரங்கில் நடக்கிறது.
இந்த விழாவில் தமிழ் திரையுலகமே திரண்டு வருகிறது. பாலிவுட் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள லிங்கா பாடல்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த இசைத் தட்டை எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

ரூ 7 கோடிக்கு
இந்த எதிர்ப்பார்ப்பு காரணமாகவே இசை வெளியீட்டு உரிமை ரூ 7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆடியோ சிடி விற்பனையே இல்லாத இன்றைய சூழலில் இந்தப் படத்துக்கு ரூ 7 கோடி என்பது சாதனை விலையாகும்.

ரகசியம்
இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலகினர் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். வட இந்திய திரையுலக பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இசைத் தட்டை ரஜினி வெளியிடுகிறார். பெற்றுக் கொள்ளும் விஐபியின் பெயரை கடைசி வரை ரகசியமாக வைக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

நிர்வாகிகள்
இந்த விழாவுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அழைப்பு தரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

போக்குவரத்து ஏற்பாடு
கடந்த முறை கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா இதே சத்யம் அரங்கில் நடந்த போது, ராயப்பேட்டை முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது நினைவிருக்கலாம். எனவே இம்முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் மாநகர காவல் துறையினர்.


Click it and Unblock the Notifications











