Coolie Audio Launch: ரஜினிகாந்தின் கூலி பட இசை வெளியீட்டு விழா எப்போது?.. வெளியான செம அப்டேட்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை இறுதியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியது. அதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை.

ஜெயிலர் படத்துக்குப் பிறகு லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்களும் சொதப்பி விட்டன. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படம் தமிழ் சினிமாவை பாக்ஸ் ஆபீஸில் தலை நிமிரச் செய்யும் என ரொம்பவே எதிர்பார்க்கப்படுகிறது.
சொதப்பும் பெரிய படங்கள்: இந்த ஆண்டு பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ரஜினிகாந்தின் கூலி படம் என்ன ஆகும் என்கிற அச்சமும் சினிமா வட்டாரத்தில் எழத்தான் செய்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் தரமான படங்களை பார்க்க விருப்பம் தெரிவித்து வரும் ரசிகர்கள் மல்டி ஸ்டார் படங்கள், பெரிய இயக்குநர் படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் சரியாக கனெக்ட் ஆகாத நிலையில், ஃபிளாப் படங்களாக மாறி வருகின்றன. அஜித் குமாரின் விடாமுயற்சி, சூர்யாவின் ரெட்ரோ, கமல்ஹாசனின் தக் லைஃப் மற்றும் தனுஷின் குபேரா உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை.
லியோவை தொடர்ந்து கூலி: ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் 600 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், அதே ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், லோகேஷ் இயக்கத்தில் பல மாநில முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ள கூலி திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடியோ லாஞ்ச் எப்போது?: ஜூலை மாதம் முழுவதுமே சன் பிக்சர்ஸ் கூலி படத்தின் பிரம்மாண்ட புரமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கியமான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 26ம் தேதி அல்லது 27ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் என ஒட்டுமொத்த படக்குழுவே வந்தால் இந்திய சினிமாவே இசை வெளியீட்டு விழாவை உற்று நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான 'சிக்கிடு' வைப் பாடல் ஹிட்டடித்துள்ள நிலையில், ஜூலை முதல் வாரத்தில் 2வது சிங்கிளும் வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் சன் பிக்சர்ஸ் பக்காவாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











