மலையாள நடிகர் சங்கத்திலிருந்து திலகன் 'சஸ்பென்ட்'!

மலையாளத் திரையுலகில் மூத்த நடிகர் திலகன். தமிழிலும் சத்ரியன், மேட்டுக்குடி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்தவர் திலகன்.
மலையாள சினிமாவில் நடந்துவரும் பல்வேறு முறைகேடுகள், முன்னணி நடிகர்களின் கையில் சிக்கி மலையாளப் பட உலகம் சீரழிவது குறித்தெல்லாம் தொடர்ந்து பேட்டிகள் அளித்து வந்தார் திலகன்.
சென்னை வரும்போதும் தவறாமல் பத்திரிகையாளர்களை அழைத்து இதுபற்றிப் பேசுவது அவர் வழக்கம்.
சமீபத்தில் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க திலகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மலையாள சினிமா நடிகர்கள் சங்கத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை விடுத்தார். மம்முட்டி - மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவில் யாரையும் தலையெடுக்க விடாமல் செய்து வருகவதாகக் கூறியிருந்தார் அவர். இதை தொடர்ந்து நேற்று மலையாள சினிமா நடிகர்கள் சங்கத்தின் ஒழுங்கு நடிவடக்கை குழு கூடியது.
இந்த கூட்டத்தில், 'மலையாள சினிமா நடிகர்கள் சங்கத்தின் புகழை குறைக்கும் விதத்தில் பேசி வரும் நடிகர் திலகனை, நடிகர்கள் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவலை, நடிகர்கள் சங்க தலைவர் டி.பி.மாதவன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'நடிகர் திலகனுக்கு வரும் 8-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. அதற்குள் அவர் நடிகர் சங்கத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்கலாம். அவர் விளக்கம் ஏற்க முடியாத அளவுக்கு இருந்தால் இந்தத் தடை நிரந்தரமாகிவிடும்' என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











