twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல தமிழ், மலையாள நடிகர் வி.எம்.சி.ஹனீபா மரணம்

    By Staff
    |

    Haneefa
    சென்னை: மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

    நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணமடைந்தார்.

    அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

    1951ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தவர் ஹனீபா. அவரது இயற்பெயர் சலீம் அகமது கெளஸ். பி.எஸ்.சி தாவரவியல் படித்தவர். கொச்சியில் உள்ள கலாபவன் என்ற பிரபல நாடகக் கலைக் கூடத்தில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

    ஒரு நாடகத்தில் அவருக்கு வைக்கப்பட்ட ஹனீபா என்ற கேரக்டர் பிரபலமானது. இதையடுத்து கொச்சின் என்ற பெயரையும், ஹனீபாவையும் சேர்த்து கொச்சின் ஹனீபா என்று அழைக்கப்பட்டார்.

    1979ம் ஆண்டு அஷ்டவக்ரன் என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் இறங்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தமிழில் மகாநதி படம் இவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு புகழ் பெற்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

    வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பலதரப்பு ரோல்களில் நடித்த திறமைசாலி நடிகர் இவர். இருப்பினும் மிகப் பெரிய காமெடியனாகவே இவர் புகழ் பெற்றார்.

    மலையாளத்தில் 1993ம் ஆண்டு வாத்சல்யம் என்ற படத்தை இயக்கவும் செய்துள்ளார் ஹனீபா.

    கருணாநிதி இரங்கல்:

    வி.எம்.சி. ஹனீபாவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,

    தமிழிலும், மலையாளத்திலும் பல படங்களை இயக்கியவரும், முக்கிய வேடங்களில் நடித்தவருமான வி.எம்.சி.அனீபா, சென்னை மருத்துவமனையில் திடீரென மறைந்துவிட்ட செய்தியினை அருமை நண்பர் மம்முட்டி தொலைபேசியில் தெரிவித்ததும், அதிர்ச்சி அடைந்தேன்.

    நான் உரையாடல் எழுதிய பாசப்பறவைகள் உள்ளிட்ட சில படங்களில் அனீபா நடித்து புகழ் பெற்றவர். என்னை சந்திக்கும் நேரத்தில் எல்லாம் மிகவும் பணிவோடும், மரியாதையோடும், உரிமையோடும் பேசக்கூடியவர்.

    கொடுமையான நோயின் தாக்குதல் காரணமாக குறைந்த வயதிலேயே மறைந்து விட்டார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X