'டம்மி' குண்டு வெடிப்பு: ரவி பலி-மனைவி சீரியஸ்!
சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகளைத் தயாரித்து வந்த பாம் ரவியின் வீட்டில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த பாம் ரவி பலியானார்.
அவரது மனைவி ரத்னாவின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
அவர்கள் தவிர மேலும் நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு மாம்பலம் காந்தி வீதியைச் சேர்ந்த ரவி (வயது 42), சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர். இவரை பாம் ரவி என்றுதான் அழைப்பார்கள். சினிமா படப்பிடிப்புக்கு டம்மி வெடிகுண்டுகள் செய்வது இவர் தொழில்.
மனைவி ரத்னாவுடன் வசித்த இவர் தனது வீட்டிலேயே ஏராளமான டம்மி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தாராம்.
நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் பதுக்கி வைத்திருந்த டம்மி வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்தன. இதில் ரவியும் அவரது மனைவி ரத்னாவும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு இடிந்து தரைமட்டமானது.
அவர்களது வீட்டையொட்டி இருந்த ஒரு கடையும் நொறுங்கியது. ரவி வசித்து வந்த வீட்டின் மேல் மாடியும் பக்கத்தில் இருந்த இன்னொரு வீடும் இடிந்து தரைமட்டமானது. மொத்தம் 3 வீடுகளும், ஒரு கடையும் முற்றாக இடிந்து விழுந்தன.
அதோடு அந்த காம்பவுண்டில் உள்ள மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதால் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்த லோகேஷ் (வயது 8), மகேஷ் (8), பாலாஜி (7), பத்மபிரியா (20) ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர். லைசென்ஸ் இல்லாமல் டம்மி குண்டுகளை ரவி வைத்திருந்தது தெரிய வந்தது.
இந் நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த டம்மி குண்டு தயாரிப்பாளர் பாம் ரவி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது மனைவி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் தான் உள்ளார்.
ரவி- ரத்னா தம்பதிக்கு வருண் குமார் என்ற ஒரே மகன் உள்ளான். 7 வது படித்து வருகிறான் வருண் குமார்.


Click it and Unblock the Notifications











