வடிவேலுவிடம் பண மோசடி-நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு

By Staff

Vadivelu Singamuthu
சென்னை நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் அவருடன் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ள சிங்கமுத்து மீது போலீஸார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிங்கமுத்து. இவர்மீது, நில மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று புகார் கொடுத்தார்.

இந்தப் புகார் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,

நிலமோசடி தொடர்பாக வடிவேலு புகார் கொடுத்துள்ளார். அது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் தொடர்பாக கொடுத்த புகார் பற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்துவார்கள்.

சிங்கமுத்து தவறு செய்திருந்தால் கண்டிப்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு விருகம்பாக்கம் போலீசார் நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் மனோகரன் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளார்.

சிங்கமுத்துவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. விசாரணையின் இறுதியில்தான் அவர் கைது செய்யப்படுவாரா, இல்லையா என்பது தெரிய வரும்.

சிங்கமுத்து மீது வடிவேலு சரமாரி புகார்..

புகார் கொடுத்த பின்னர் சாலிக்கிராமத்தில் உள்ள அலுவலகத்தில் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

என்னிடம் நடிப்பு சான்ஸ் கேட்டு வந்தவர் சிங்கமுத்து. எனக்கு ஜாதகம் பார்க்க தெரியும், ரியல் எஸ்டேட் தொழில் தெரியும் என்றெல்லாம் கூறினார். கழுத்தில் எப்பொழுதும் அவர் துளசி மாலை அணிந்திருப்பார். அவருடைய தோற்றத்தையும், பேச்சுத் திறமையையும் நம்பி நான் ஏமாந்து போனேன்.

அப்போது நான் தேவர் மகன் உள்பட பல படங்களில் இரவு-பகலாக பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் சிங்கமுத்து, எனக்கு அறிமுகமானார்.

என்னால் திரையுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட சிங்கமுத்து, எனது இடைவெளி இல்லாத உழைப்பை பயன்படுத்தி, எனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் போல் நடித்து, என்னை மோசடி செய்யும் எண்ணத்தோடு பல விதங்களிலும் ஏமாற்றி விட்டார்.

மோசடியாக ஆவணங்கள் தயாரித்தது பற்றியும், நான் ஏமாற்றப்பட்ட விதம் குறித்தும் அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதை தெரிந்து, அந்த நம்பிக்கை மோசடி செய்த சிங்கமுத்து மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் எனக்கு பல விஷயங்களிலும் இடையூறு செய்கிறார்கள்.

மைத்துனரை மிரட்டி ஊருக்கு அனுப்பி விட்டனர்...

எனது அலுவலகத்தில் உள்ளவர்களை போனில் மிரட்டுகிறார்கள். எனது மைத்துனரை மிரட்டி ஊருக்கே அனுப்பிவிட்டார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

வடிவேல் வீட்டை சுற்றி எனது ஆட்கள் தான் இருக்கிறார்கள். அவரை நான் சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார். எல்லா மக்களையும் சிரிக்க வைக்கிற எனக்கு, மன உளைச்சலை ஏற்படுத்தி நடிப்பு தொழிலை விட்டு விரட்டுவதற்கு சிங்கமுத்து சதி செய்து வருகிறார்.

படத்தில் கோமாளி, நிஜத்தில் நான் ஏமாளி

நான் அவர் மூலம் ஏகப்பட்ட நிலங்களை வாங்கினேன். அந்த பத்திரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. ஆனால் இடங்களைதான் காணவில்லை. என் அப்பாவித் தனத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை அவர் சுருட்டிவிட்டார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறேன். சட்டம் தன் கடமையை செய்யும்.

படத்தில் நான் கோமாளி, நிஜத்தில் நான் ஏமாளி நல்லவேளை என்னை விஷம் வைத்து கொல்லவில்லை. எனது குலதெய்வமான அய்யனார் காப்பாற்றி விட்டார்.

சிங்கமுத்து இப்போது புதுசாக சில காமெடி நடிகர்களிடம் கூட்டு சேர்ந்திருக்கிறார். அந்த நடிகர்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். என்னைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.

நிலத்தை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்.
நான் சினிமாவில் மக்களை சிரிக்க வைத்துள்ளேன். ஆனால் என் வாழ்க்கை இப்போது சிரிப்பாகி விட்டது. ஒரு படத்தில் கிணறை காணோம், கிணறை காணோம்ன்னு தேடுவேன். அது ஒரு காமெடி சீனில் வரும். அது மாதிரி இப்ப என்னிடம் நில பத்திரம் இருக்கு. ஆனால் நிலத்தை காணவில்லை. நிலத்தை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்.

என்னுடன் நடித்த 2 நடிகர்களே என்னை ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்.

மன உளைச்சலுக்கு ஆளான ஒருவர், டாக்டரிடம் சென்று தனக்கு சிகிச்சை அளிக்கும் படி கேட்டார். அப்போது டாக்டர், 2 நாட்கள் கழித்து வாருங்கள் என்றார்.

அதற்கு மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர், இன்று இரவு கூட என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. எனவே எனக்கு இப்போதே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டார்.

உடனே அந்த டாக்டர், அருகே நடக்கும் சர்க்கசுக்கு செல்வோம். அங்கு உலக பிரசித்தி பெற்ற பபூன் ஒருவர் வருகிறார். அவரை பார்த்தாலே உங்கள் கவலை எல்லாம் பறந்து விடும் என்றார்.

அதற்கு மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டவர், அந்த பபூனே நான் தான் என்றதும் டாக்டர் திகைத்து விட்டார்.

இப்போது அந்த பபூன் நிலையில் நான் இருக்கிறேன் என்றார் வடிவேலு.

பேட்டி கொடுத்த போது படு உற்சாகமாக இருந்தார் வடிவேலு. புகைப்படக்காரர்கள் தன்னை விதம் விதமாக போட்டோ எடுக்க அனுமதித்தார். மேலும், சினிமாவில் வருவது போலவும் முக பாவனைகளை மாற்றி போஸ் கொடுத்தார்.

எனக்கு இன்று ஷூட்டிங் இல்லை. இங்கே ஒரு ஷூட்டிங் நடப்பதுபோல நினைத்துக்கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாலியாக பேசியபடி போஸ் கொடுத்தார்.

சிங்கமுத்து யார்...?

பல ஆண்டுகளாக தமிழ்ப் படங்களில் 'துண்டு துக்கடா' ரோல்களில் நடித்து வருபவர்தான் சிங்கமுத்து. வடிவேலுவுடன் இவர் 'டீம்' சேர்ந்த பின்னர்தான் வெளியில் பிரபலமாக ஆரம்பித்தார்.

வடிவேலுவின் படங்களில் தவறாமல் இடம் பெறுவார். சிங்கமுத்துவும் மதுரைக்காரர்தான்.

கடந்த ஆண்டு இவரது மகன் வாசன் ஹீரோவானார். அந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துக் கொடுத்திருந்தார். அந்தப் படத்திற்குக் கூட வடிவேலுதான் பெருமளவில் நிதியுதவி செய்து உதவியதாக கூறப்பட்டது.

சமீப காலமாக வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையே பிரச்சினையாகி விட்டது. இதனால் வடிவேலு படங்களில் சிங்கமுத்து இடம் பெறவில்லை. மேலும் அவருக்குப் போட்டியாக உள்ள காமெடியன்களுடன் சேர்ந்து நடித்து வந்தார்.

வடிவேலுவுடன் படு நெருக்கமாக இருந்து வந்த சிங்கமுத்துவே இப்போது அவரை பல கோடி அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்திருப்பது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X