For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கோமா நிலையிலிருந்த பெண்ணை பிழைக்க வைத்தது என் காமெடி - வடிவேலு பேட்டி

  By Staff
  |

  Vadivelu
  "சேலத்தில் விபத்தில் அடிபட்டு கோமா நிலையிலிருந்த ஒரு பெண்ணை எனது நகைச்சுவை காட்சிகள் சுயநினைவுக்கு திருப்பியிருக்கு...", என்கிறார் வைகைப் புயல் வடிவேலு.

  ஆர் கே நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் அழகர் மலை. இந்தப் படத்தில் நகைச்சுவையில் கலக்கியுள்ளாராம் வடிவேலு. ஒரு காட்சியில் அவர் டெர்மினேட்டர் படத்தில் வரும் அர்னால்டு கெட்டப்பிலும் வருகிறாராம்.

  வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. அதையொட்டி சென்னையில் வடிவேலு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி (போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக வந்தவர், அனைவரிமும் தனது பாணியில் வருத்தம் தெரிவித்துவிட்டு அளித்தது...):

  அழகர் மலையில் உங்கள் வேடம் பற்றிச் சொல்லுங்கள்...

  எல்லா படங்களுக்குமே நான் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் உழைக்கிறேன். சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு போய் எதையும் யோசிக்கிறேன் என்று சொல்லி தயாரிப்பாளர்களின் காசை விரயம் செய்வதில் எனக்கு சம்மதம் இல்லை. நாளைக்கு சுடுகின்ற தோசைக்கு முந்திய நாளே மாவை தயார் செய்து விட வேண்டும். அப்போது தான் தோசை ருசியாக' இருக்கும். அது மாதிரி என் படங்களில் காமெடி சீனுக்காக முந்திய நாளே தயார் ஆகிறேன்.

  அழகர்மலையில் எனக்கு தனியான காமெடி ட்ராக் கிடையாது. கதையோடு வரும் காமெடி இது. ஆர்கேவுக்கு நான்தான் இதில் தாய்மாமன். படம் முழுக்க வர்றேன். உங்க வயித்து வலிக்கு நான் கியாரண்டி. எல்லாம் அவன் செயல் படத்தை விட இரண்டு மடங்கு இந்தப் படத்தில் எங்க கூட்டணி ஒர்க் அவுட் ஆகும்...

  தொடர்ந்து அடிவாங்கும் நகைச்சுவை காட்சிகளிலேயே நடிக்கிறீர்களே?

  அடிவாங்குவது வடிவேலு இல்லை. வடிவேலை அடிக்க முடியாது. கதாபாத்திரம் தான் அடிவாங்குகிறது. நான் அடிவாங்குகிறேனா? இல்ல சாக்கடையில் விழுகிறேனா? என்பது முக்கியமல்ல. மக்கள் சிரிக்கிறார்களா? என்பதுதான் முக்கியம்.

  அடிவாங்குகிற காட்சியாக இருந்தாலும், அதில் யாரும் யோசிக்காத விஷயங்களை கொண்டு வரவேண்டும். திரும்ப வருகிற மாதிரியான காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். புது அடிவாங்குகிற காட்சிக்காக ரூம்' போட்டு யோசிக்கிறோம் அப்பு.... சும்மா இல்ல!!

  நகைச்சுவை நடிப்பில் தொடர்ந்து வித்தியாசம் காட்ட முடியுமா?

  நான் அரை 'டவுசர்' போட்டு நடித்தவன். இப்போது, அரசர் வேடம் வரைக்கும் வந்து விட்டேன். இதை விட வேறு என்ன வேண்டும். சொல்வதற்கு நிறைய காமெடி இருக்கிறது. எல்லாவற்றையும் மக்கள் கிட்டேயிருந்து தான் எடுக்கிறேன். அவர்களை விட்டு தள்ளிப்போயிட்டா வேறு எவனுக்கோ காமெடி பன்றாங்கண்னு சிரிக்காமல் இருந்துடுவாங்க... அதனாலதான் நீங்க பேச,சிரிக்க நினைக்கிற விஷயங்களை தேடிப்பிடிக்கிறேன்.

  உங்களோட இருந்த சில நடிகர்கள் இப்போது உங்கள் பக்கம் இல்லை என்கிறார்களே?

  அவங்களும் வரணுமில்லை... இப்போ அவங்க தெரிஞ்ச முகமாகிட்டாங்க. வேற வேற படங்களில் நடிக்க வாய்ப்பு வருது, போய் பண்றாங்க. இப்போ நிறைய புதுமுகங்களோடும், புதிய நகைச்சுவை காட்சிகளோடும் நான் போய் கொண்டிருக்கிறேன். வெரைட்டி வேணும்ல...

  கதாநாயகனாக நடிக்க நிறையபேர் வருகிறார்கள். ஆனால், நகைச்சுவை நடிகராக ஆசைப்பட்டு அதிகமாக வருவது இல்லையே, ஏன்?

  கதாநாயகனாக அடி-தடி, காதல் காட்சிகளில் இறங்குவது ஈஸி. ஆனால், சிரிக்க வைக்கிறது கஷ்டம். காமெடியை நீங்கள், நான் யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால், காமெடி பண்றது கஷ்டம். அது கூட காரணமாக இருக்கலாம்.

  அழகர் மலையில் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?

  அய்யா... என் காமெடிக்குன்னு ஒரு கூட்டம் இருக்கா இல்லியா... அந்தக் கூட்டம் வரணுமின்னு என்னோட போட்டோவப் போடறது ஒரு தப்பாய்யா... அழகர் மலையில் அதிரடி காமெடி தர்பார் நடத்தியிருக்கோம்.

  சமீபத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவம்?

  சேலத்தைச் சோ்ந்த ஒரு குழந்தை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜிலிருந்துருக்கு. அப்போ என்னோட காமெடியை டிவில போட்டுக் காட்டி, குழந்தையை சுய நினைவுக்கு கொண்டு வந்து குணப்படுத்தினாங்களாம். உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போச்சுய்யா... அந்தப் பெண் இப்போ நல்லா இருக்காம். இதுக்குமேல நம்ம காமெடிக்கு வேற என்ன பெருமை வேணும்...

  காமெடிக்கு இப்போது முன்பை விட அதிக முக்கியத்துவம் உள்ளதே...

  தனி சேனல் ஆரம்பிக்கிற அளவுக்கு நகைச்சுவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. காமெடி இப்போது தேவையான மருந்து. காமெடி இல்லாமல் சினிமா இல்லை, என்றார் வடிவேலு.

  பேட்டியின்போது படத்தின் நாயகன் ஆர்கே, நாயகி பானு, மக்கள் தொடர்பாளர் ஜான் ஆகியோர் உடனிருந்தனர்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X