சினிமா எடுப்பதாகக் கூறி 4 கார்கள் கடத்தல்!
சென்னை: சினிமா தயாரிப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு, விலை உயர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து, அந்த கார்களின் டிரைவர்களுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு கார்களை கடத்திச் சென்றனர் சில மர்ம நபர்கள். இவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் செரீப் (வயது 30). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரை அஜய்குப்தா (42) என்பவர் அணுகி தான் மும்பையில் இருந்து வருவதாகவும், மும்பையில் உள்ள ஒரு பெரிய பட நிறுவனம் பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும், படப்பிடிப்பு குழுவினர் பயணம் செய்ய 40 புதிய மாடல் கார்கள் வாடகைக்கு வேண்டும் என்றும் கூறினார்.
அதிக கமிஷனுக்கு ஆசைப்படு, அஜய்குப்தாவை அழைத்துக்கொண்டு வடபழனி, சாலிக்கிராமம் ஆகிய இடங்களுக்கு சென்று புதிய ரக கார்களை புக் செய்தார் செரீப்.
காரின் உரிமையாளர்களிடம் படப்பிடிப்பு 2 மாதம் நடக்கும் என்று கூறி ஒரிஜினல் ஆர்.சி. புத்தகங்களையும் பெற்றுக் கொண்டு சோழவரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் 3 அறைகளை வாடகைக்கு எடுத்து அஜய்குப்தா, செரீப் உள்பட 5 பேர் தங்கியுள்ளனர். மறுநாள் சென்னையில் இருந்து 7 உயர்ரக கார்கள் சோழவரம் வந்து சேர்ந்தன.
ஓட்டலின் அருகே இருந்த பெட்ரோல் பங்க்கில் அந்த கார்களுக்கு பெட்ரோல் போட்டு விட்டு கார்களை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர்களை அஜய்குப்தா தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து வந்தார்.
அங்கு செரீப்புக்கும், 7 கார் டிரைவர்களுக்கும் மதுவிலும், குளிர் பானத்திலும் மயக்க மருந்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்தார். இதைக் குடித்த அனைவரும் மயங்கி விழுந்தனர்.
8 பேரும் மயங்கி விழுந்ததும் அவர்களின் செல்போன்களை அஜய் குப்தாவும், அவருடன் இருந்தவர்களும் எடுத்துக் கொண்டனர். பின்னர் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருந்த 4 கார்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். மீதி 3 கார்களையும் பெட்ரோல் பங்க்கிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
மறுநாள்வரை யாரும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது அங்கு செரீப் உள்பட 8 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சோழவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த செரீப் உள்பட 8 பேரையும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இவர்களில் செரீப்பை தவிர மற்ற 7 பேரும் டிரைவர்கள்.
கார்களையும் கடத்தியவர்களையும் சோழவரம் போலீஸ் தேடுகிறது.


Click it and Unblock the Notifications











