இஷ்டத்திற்கு டிக்கெட் நிர்ணயித்துக் கொள்ளலாம்!
தியேட்டர்களே விருப்பபடி டிக்கெட் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி
தியேட்டர் நிர்வாகங்களே தங்களது இஷ்டப்படி டிக்கெட் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதனால் தியேட்டர்காரர்கள் குஷியாக இருந்தாலும் வர வர தியேட்டர்களுக்கு வருவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ள ரசிகர்களை நினைத்து அதை முழுமையாக அமல்படுத்த முடியாமல் தியேட்டர் நிர்வாகங்கள் தயக்கம் காட்டுகின்றனவாம்.
இப்போதெல்லாம் முன்பு போல இல்லை. படம் நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் தியேட்டர்களுக்குப் போய் பார்க்கிறார்கள். அதை விட பிளாக் மார்க்கெட்டில் கிடைக்கும் சிடிக்களையும், டிவிடிக்களையும் வாங்கி வீட்டில் போட்டுப் பார்த்து விடுகிறார்கள்.
இதனால் தியேட்டர்களுக்குப் போகும் செலவு மிச்சம், டப்பா படமாக இருந்தால் தேவையில்லாமல் வாங்கிக் கொள்ளும் தலை வலி மிச்சம், நொறுக்குத் தீனி, போக்குவரத்து செலவு மிச்சம் என ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக மக்கள கருதுகிறார்கள்.
இந்த நிலையில்தான் மே 20ம் தேதி தியேட்டர் நிர்வாகங்களே தங்களது இஷ்டப்படி கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
ஆனால் இதை அமல்படுத்த தியேட்டர் நிர்வாகங்கள் தயங்குகின்றனவாம். காரணம் முன்பு போல இப்போது தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதால்தான்.
கம்ப்யூட்டரிலேயே முழுப் படத்தையும் பார்த்து விடுவோரின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து விட்டது. டிவிடி, சிடி போக ஆன்லைனிலேயே புதுப் படங்களை ரிலீஸ் செய்து விடுகிறார்கள் கள்ள மார்க்கெட் பிரகஸ்பதிகள்.
தற்போது சென்னை நகரில் மல்ட்பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 120 என்று இருக்கிறது. சாதாரண தியேட்டர்களில் குறைந்தபட்சம் ரூ. 10 என்று உள்ளது. ஆனால் ஒரு சிடி அல்லது டிவிடியின் விலை அதிகபட்சம் ரூ. 30க்குள் முடிந்து போய் விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் இதுகுறித்து கூறுகையில், தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவது குறைந்து கொண்டே போகிறது. இந்த நிலையில் டிக்கெட் கட்டணத்தை மேலும் குறைப்பது எங்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்.
கடந்த இரண்டு மாதங்களாக அருமையான படங்கள் வந்து கொண்டுள்ளன. ஆனால் தியேட்டர்களில் ஹவுஸ் புல் போர்டு போட முடியாத நிலை.
இந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் தியேட்டர்களில் மிகக் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது குறைவாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட 65 சதவீத சீட்கள்தான் நிரம்பும் நிலை உள்ளது என்கிறார்.
அபிராமி ராமநாதன் கூறுகையில், தியேட்டர்களில் செய்யப்படும் வசதிகளுக்கே கட்டணத்தின் 75 சதவீதம் செலவாகி விடுகிறது. இந்த நிலையில் கட்டண நிர்ணயம் செய்யும் அரசின் அனுமதியை முழுமையாக பயன்படுத்துவதில் தியேட்டர் நிர்வாகங்களுக்கிடையே தயக்கம் உள்ளது என்கிறார்.
இந்தப் பஞ்சாயத்தையெல்லாம் தீர்க்க வேண்டுமானால் கள்ள மார்க்கெட்டில் கோலாகலமாக விற்கப்படும் திருட்டு சிடி, டிவிடிக்களை முழுமையாக ஒழிக்க வேண்டும். திரையுலகினர் நல்ல நல்ல படங்களாக கொடுக்க வேண்டும். தியேட்டர்களில் கட்டணங்கள் தாறுமாறாக இருக்கக் கூடாது, ரசிகர்களுக்கு சிறப்பான சேவைகள், வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினை தீர்ந்து ரசிகர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் தியேட்டர்களுக்கு படையெடுக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











