twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னைக் கார் ஏற்றிக் கொல்லப் பார்த்தார் வடிவேலு - சிங்கமுத்து

    By Staff
    |

    Singamuthu
    சினிமாவில் காமெடி செய்வதைப் போல நிஜத்திலும் காமெடி செய்கிறார் வடிவேலு. அவரது உண்மைகளை அறிந்த 2 பேர் செத்துப் போய் விட்டனர். நான் மட்டும்தான் பாக்கி. எனவே என்னையும் தீர்த்துக் கட்டத் துடிக்கிறார். கார் ஏற்றியும் கொல்லப் பார்த்தார் என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.

    வடிவேலு - சிங்கமுத்து விவகாரம் திரையுலகை உலுக்கி எடுத்து வருகிறது. நேற்று வரை நெருங்கிப் பழகிய இருவரும் இன்று கீரியும், பாம்புமாக மாறியிருப்பது அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது.

    தற்போது சிங்கமுத்து தலைமறைவாக இருக்கிறார். முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தலைமறைவாக உள்ள அவர் மாலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி...

    வடிவேலு 15 வருடத்துக்கு முன்பு அடிமாட்டு விலைக்கு நிறைய சொத்துக்கள் வாங்கினார். அப்போது லட்சம் ரூபாய்க்கு வாங்கிய நிலங்கள் இப்போது கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்துள்ளன.

    துணையாக இருக்கட்டும் என்று என்னை அழைத்து போவார். அவர் சொத்து வாங்கியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 7 கோடி ரூபாய் நான் மோசடி செய்யவில்லை.

    எல்.ஐ.சி. பில்டிங்கையே விலை பேசியவராச்சே..!

    சினிமாவில் என் கிணற்றை காணோம் என்று போலீசில் புகார் செய்தது போல நிஜத்திலும் காமெடி செய்கிறார். எல்.ஐ.சி. பில்டிங்கையே விலை பேசியவராச்சே.

    ஆனால் வடிவேலு சொல்வது போல் அவர் நிலங்கள் காணாமல் போகவில்லை. கிராம நிர்வாக அதிகாரியிடம் சர்வே நம்பரை சொல்லி கேட்டால் அடையாளம் சொல்வார்.

    எனக்கு ஒரு வீடுதான் உள்ளது. ஆனால் வடிவேலுக்கு சாலி கிராமத்தில் 3 வீடுகளும், வளசரவாக்கத்தில் 1 வீடும், தாம்பரத்தில் ஒரு வீடும் உள்ளன. சென்னையில் 15 ஏக்கர் நிலம் வாங்கி போட்டுள்ளார்.

    ரகசியங்கள் தெரிந்த 2 பேர் செத்து விட்டனர்...

    எல்லாம் சேர்த்து ரூ. 30 கோடிக்கு மேல் போகும். அவரது ரகசியங்கள் தெரிந்த இரண்டு பேர் செத்து விட்டனர். நானும் இல்லாவிட்டால் ரகசியம் யாருக்கும் தெரியாமல் போய் விடும் என கருதுகிறார்.

    எனவேதான் என்னை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டுகிறார். நெசப்பாக்கத்தில் நான் ஸ்கூட்டரில் சென்றபோது காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. காரில் வந்தவர்கள் டேய், ஏய் என கத்தியபடி விரட்டினார்கள். வேகமாய் ஓட்டி மயிரிழையில் தப்பினேன். அப்போது செல்போன் வந்தது. வெளியே போகும்போது எச்சரிக்கையாக இருங்கள் என்று போனில் பேசியவர் சொன்னார். பிறகு வீட்டிலும் அடியாட்களை ஏவி கொலை மிரட்டல் விடுத்தார். நடிகர் சங்கத்தில் இது பற்றி புகார் செய்து இருக்கிறேன்.

    என் தாலியை ஏன் அறுக்கிறார்...?

    நிலம் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக கருதினால் இவருக்கு இடத்தை விற்றவனை அழைத்து தானே கேட்க வேண்டும். என் தாலியை ஏன் அறுக்கிறார்.

    10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார். படப்பை புஷ்பகிரியில் நிலம் வாங்கி காம்பவுண்டு சுவர்கள் போட்டு வைத்துள்ளார். அதை தான் புறம்போக்கு நிலம் என்கிறார். ஆந்திர விவசாயிகள் அந்த இடத்தை விற்றனர். அதற்கு பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடி மாட்டு விலைக்குதான் அதை வாங்கினார். இப்போது பல கோடி மதிப்பாகியுள்ளது என்றார் சிங்கமுத்து.

    வடிவேலு மீது இவ்வளவு புகார்களைக் கூறும் சிங்கமுத்து அதை ஏன் போலீஸில் ஆஜராகி சொல்லாமல் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

    சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு-வடிவேலு:

    இந் நிலையில் என்னை மிகப் பெரிய கொடுமைக்காரர் போல சித்தரித்துப் பேசியுள்ளார் சிங்கமுத்து. எனவே அவர் மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட ஈடு கோரி இன்னொரு வழக்கு தொடரப்படும் என வடிவேலு கூறியுள்ளார்.

    இகு குறித்து வடிவேலுவின் வழக்கறிஞர் பால் கனகராஜ் கூறுகையில்,

    சினிமா உலகில் வடிவேலுக்கு என்று தனி கவுரவம் உள்ளது. இதை கெடுக்கும் வகையிலும் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சிங்க முத்து தகவல்களை கூறி வருகிறார்.

    எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவரை நரகாசுரன் என்று கூறி கொடுமைகாரன் போல சித்தரிக்கிறார்.

    சிலரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டி கொலைகாரனாகவும் ஆக்க பார்க்கிறார்.

    வடிவேலு தான் அவரது சொத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக கூறி குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

    வடிவேலு மீது குறைகளை கூறினால் அவர் செய்த மோசடி அமுங்கி போய் விடும் என்று கருதி மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி வருகிறார்.

    அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. எல்லாமே அவதூறு குற்றச்சாட்டு. எனவே சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.

    இந்த இரு வழக்குகளையும் வருகிற திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளேன் என்றார்.

    வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்ஜாமீன் -விசாரணை ஒத்திவைப்பு

    இதற்கிடையே, இன்று சிங்கமுத்து தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    மனுவைப் பரிசீலித்த பெஞ்ச், விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X