மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை-போலீஸில் மீண்டும் சினேகா புகார்!

சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியதாக ஏற்கனவே பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். 45 நாட்கள் சென்னை புழல் மத்திய ஜெயிலில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராகவேந்திரா வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒழுங்காக ஆஜராவதில்லை.
ஆனால், நடிகை சினேகாவோ தவறாமல் கோர்ட்டில் ஆஜராகி கண்ணீருடன் சாட்சியம் அளித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நேற்று பகல் 12 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், ஏற்கனவே தொல்லை கொடுத்த ராகவேந்திரா மீண்டும் நடிகை சினேகாவுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வருவதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எம்.எஸ். தகவலில் "என்றைக்கும் நான்தான் உன் கணவன்" என்று கூறியுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய எஸ்எம்எஸ்கள் அனுப்பி வருவதாகவும் இது சினேகாவை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த எஸ்எம்எஸ்களை அனுப்பியது ராகவேந்திராதானா என உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











