எனக்கு எதிராகப் பேசும்படி குழந்தையை மாற்றியுள்ளனர்-வனிதா

நடிகர் ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் பிறந்த விஜய் ஸ்ரீஹரியை சென்னையில் நேற்று முன்தினம் அவனது பாட்டியும் ஆகாஷ் அம்மாவுமான மகேஸ்வரி நிருபர்களிடம் அழைத்து வந்து பேட்டி அளிக்க வைத்தார்.
விஜய் ஸ்ரீஹரி கூறும்போது, "நான் அப்பாவுடன்தான் போக விரும்புகிறேன். அம்மாவுடன் போனால் என்னை டார்ச்சர் செய்வார். கோர்ட்டில் அம்மாவுடன் போகச்சொன்னால் போகமாட்டேன், அழுவேன்," என்றெல்லாம் கூறினான்
இதுகுறித்து வனிதாவிடம் கேட்டபோது, "எனது மகன் விஜய் ஸ்ரீஹரி சிறுவன். அவனிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி குழப்பி வைத்துள்ளனர். எனக்கு எதிராக இதுபோல் பேசும்படி தூண்டி விட்டுள்ளனர். இது கேவலமான காரியம்.
என் குழந்தையின் எதிர்காலம் எனக்கு முக்கியம். அவன் பள்ளி செல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
சுய நலத்துக்காக குழந்தையை பயன்படுத்துவது தவறான செயல். குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்கணும். நானும் ஆனந்தராஜூம் படும் கஷ்டங்கள் எங்களுக்குத்தான் தெரியும்.
குழந்தையை என்னிடம் ஒப்படைக்காமல் இருக்க உச்சநீதிமன்றம் போய் உள்ளனர். குழந்தை நலனுக்காக நான் பொறுமையாக இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..", என்றார்.
வனிதா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதற்கிடையே நடிகை வனிதா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார் அவரது முன்னாள் கணவர் ஆகாஷ்.
இதுதொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகை வனிதா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் மகன், விஜய்ஸ்ரீஹரியை அவரிடத்தில் 2 வாரத்தில் ஒப்படைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் உத்தரவு பிறப்பித்த 3-வது நாளிலேயே விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவரது தந்தை விஜயகுமாரிடம் சென்னை விமான நிலையத்தில் தகராறு செய்துள்ளார்.
வனிதா-ஆனந்தராஜின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே இந்த இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
மேலும் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்கும் காலஅவகாசத்தை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு செய்ய கேட்டு ஆகாஷ் மற்றொரு மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











