என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு...!- வடிவேலு புகார்!

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தமிழ்நாடு முழுவதும் தீவிரம் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் போது விஜயகாந்தை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். இந்த நிலையில் முதுகுளத்தூரில் அவர் வேனில் பேசி கொண்டு இருந்தபோது அவர் வேன் மீது கல்வீசப்பட்டது. இதேபோல சிவகங்கையில் பேசிக் கொண்டிருந்த போதும் கல்வீசப்பட்டது.
நேற்று மாலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு பிரசாரம் செய்ய சென்றார். அப்போது ஊருக்குள் நுழையும் இடத்தில் தேமுதிகவினர் வடிவேல் சென்ற வேன் மீது சரமாரியாக கல்வீசி தாக்கி விட்டு ஓடிவிட்டனராம்.
இதனால் வேன் கண்ணாடிகள் உடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் இல்லை. இந்த சம்பவம் குறித்து நடிகர் வடிவேல் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பிரசாரம் செய்ய வருவதை முந்கூட்டியே அறிந்து யாரோ சிலர் இருட்டிலிருந்து கல்வீசி தாக்கினர். நான் பிரசாரம் செய்யும் இடங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லை.
பேருக்காக 4 போலீசார் மட்டும் வந்து செல்கிறார்கள். போதிய பாதுகாப்பு இல்லை. இதற்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான். எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த செயலுக்கு பின்னால் உள்ளவர்கள் யாரென்று மக்களுக்கும் தெரியும்," என்றார்.
பிரசாரம் முடித்து கொண்டு மதுரைக்கு வந்த வடிவேலுவிடம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கல்வீச்சு சம்பவம் குறித்து விசாரித்தார்.


Click it and Unblock the Notifications











