தென் மண்டல திரைப்பட தணிக்கை அதிகாரியாக வி.பழனிச்சாமி நியமனம்
சென்னை: மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (சென்சார் போர்டு) தென் மண்டல தணிக்கை அதிகாரியாக, வி.பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில், தென் மண்டல திரைப்பட தணிக்கை அலுவலகம் உள்ளது.
இந்திய சினிமா தணிக்கைத்துறை அலுவலகங்களில் சென்னையில் உள்ள இந்த அலுவலகம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது என்றும், இதுவரையில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் இதன் தலைமைப்பொறுப்பில் இருந்தவர்களும், அதன் உறுப்பினர்களாக செயல்பட்டவர்களும் இருந்தனர் என்று தணிக்கை குழு உறுப்பினராக பணியாற்றியவர் பெருமைபட தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பெருமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இந்த அலுவலகத்தின் தணிக்கை அதிகாரியாக கடந்த ஜுன் மாதம் 17-ந் தேதி டி.ராஜசேகர் என்ற அதிகாரி பதவி ஏற்றார். தஞ்சாவூரைச் சேர்ந்த டி.ராஜசேகர் 1998-ம் ஆண்டு பஞ்சாப் மாநில பிரிவு ஐ.எப்.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா தணிக்கை அதிகாரியாக பதவி ஏற்ற ஓரிரு மாதங்களிலேயே, லஞ்சம் வாங்கியதாக டி.ராஜசேகரை, சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் சினிமா தணிக்கை சான்று அளிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'காதல் சொல்ல வந்தேன்' என்ற தமிழ்படத்துக்கான தணிக்கை சான்று வழங்குவதற்காக, அதன் தயாரிப்பாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று தணிக்கை அதிகாரி டி.ராஜசேகர் பேரம் பேசி, முன்பணமாக 25 ஆயிரம் ரூபாய் கேட்டு, அதில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. போலீசாரால், கடந்த மாதம் 27-ந் தேதி, டி.ராஜசேகர் கைது செய்யப்பட்டார். சென்னையில், சினிமா தணிக்கை சான்று வழங்குவதற்காக தென் மண்டல தணிக்கை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த நிலையில், தென் மண்டல திரைப்பட தணிக்கை அதிகாரியாக வி.பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுகுறித்து, சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தென் மண்டல அதிகாரியாக வி.பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தற்போது அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தென் மண்டல திரைப்பட தணிக்கை அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
1995-ம் ஆண்டு இந்திய தகவல் பணியில் சேர்ந்த வி.பழனிச்சாமி, டெல்லியில் பத்திரிகைத் தகவல் அலுவலகத்திலும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்திலும், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவிலும் பணியாற்றி உள்ளார். 2008-ம் ஆண்டில் இருந்து சென்னை வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வி.பழனிச்சாமி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
வி.பழனிச்சாமி இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியில் இருந்து ஜுன் மாதம் 16-ந் தேதி வரை இப்பொறுப்பை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 2-வது முறையாக இந்தப்பொறுப்பை ஏற்றுள்ளார்...", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











