நடிகர் முரளி உடலுக்கு ரஜினி,திரையுலகினர் அஞ்சலி-நாளை தகனம்-படப்பிடிப்புகள் ரத்து

நடிகர் முரளி இன்று அதிகாலையில், மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவால் தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடிகர் ரஜினிகாந்த் விரைந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மகன் அதர்வாவுக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், சூர்யா, சிவக்குமார், ஆனந்த்பாபு உள்ளிட்டோரும், இயக்குநர் சேரன் உள்ளிட்டோரும் நேரில் வந்து முரளி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முரளியின் இறுதிச்சடங்குகள் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. வளசரவாக்கம் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. பின்னர் பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல்தகனம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளியின் மறைவையொட்டி நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











