மோனிகா பேடி தண்டனையைக் குறைத்தது உச்ச நீதிமன்றம்!

மீண்டும் படங்களில் நடிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் அபு சலீம். இவர் மீது 2 கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் உள்ளன. இவரது காதலி மோனிகா பேடி. அபு சலீமையும், மோனிகாவையும் 2005-ம் ஆண்டு போர்ச்சுகலில் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படமாட்டாது என மத்திய அரசு உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போர்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இப்போது மும்பை சிறையில் அபு சலீம் உள்ளார். இதனிடையே மோனிகா பேடி மீது போலி பாஸ்போர்ட் வழக்கு ஹைதராபாதிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து மோனிகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மோனிகா அப்பீல் செய்தார். அப்போது தண்டனை 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
ஆனாலும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனுவில் இதே வழக்கில் போர்ச்சுக்கல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனவே இந்தியாவில் என்னை தண்டிக்க முடியாது. தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று மோனிகா பேடி கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி. சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணையின் முடிவில், "போலி பாஸ்போர்ட் வழக்கில் மோனிகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியே. எனவே தண்டனையை ரத்து செய்ய முடியாது. ஆனால் இதுநாள்வரை மோனிகா அனுபவித்த சிறை தண்டனையே (இரண்டரை ஆண்டுகள்) போதுமானது. எனவே தண்டனைக் காலத்தை இரண்டரை ஆண்டுகளாகக் குறைக்கிறோம்," என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் படங்களில் நடிக்கப் போவதாக மோனிகா பேடி அறிவித்துள்ளார். இந்த வழக்கால், தனக்கு வந்த ஏராளமான வாய்ப்புகள் பறிபோனதாகவும், இப்போது வழக்கு முடிந்துவிட்டதால் மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











