விஜயகுமார் -மஞ்சுளா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு!

நடிகர் விஜயகுமாருக்கும் 2-வது மகள் வனிதாவுக்கும் இடையேயான குடும்ப சண்டை தெருவுக்கு வந்து விட்டது. வனிதாவின் மகன் விஜய்ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜ், விஜயகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே நேரத்தில் விஜயகுமார், மஞ்சுளா, அருண் விஜய் ஆகியோர் மீது வனிதா கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து டி.ஜி.பி. லத்திகாசரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரை சந்தித்து வனிதா புகார் அளித்தார். 3 பேர் மீது பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. விஜயகுமார், மஞ்சுளா, அருண்விஜய் ஆகியோர் மீது ஜாமீனில் வெளி வரக்கூடிய சட்டப் பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் உடலை தொட்டு அவர்களுக்கு தொல்லை கொடுத்தாலோ, அடித்து உதைத்தாலோ, இந்த சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஜாமீனில் உடனடியாக வரமுடியாது!
விஜயகுமார், மஞ்சுளா, அருண் விஜய் ஆகியோர் தன்னை தாக்கியதாக வனிதா புகார் அளித்திருந்தார். இதன் பேரில் இச்சட்டப் பிரிவின் கீழ் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப்படி, பாதிக்கப்படும் பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டால், அவர்களை தாக்கியவர்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பலியானால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.
இதனால் பயந்து போயுள்ள விஜயகுமாரும், மஞ்சுளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "குடும்ப சண்டையில் எங்கள் மீது வனிதா பொய் புகார் கொடுத்துள்ளார்.
விசாரணைக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று விஜயகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு வனிதாவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் வனிதாவின் கருத்தையும் கேட்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதில் முன்ஜாமீன் கிடைக்காவிட்டால் விஜயகுமார் - மஞ்சுளா இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பியதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











