பாலாவுக்கு ஊனமுற்றோர் நல வாரியம் கண்டனம்!
Phy

இந்த விஷயத்தில் இயக்குநர் பாலா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என வாரியம் அறிவித்துள்ளது.
வாரி்யத்தின் உறுப்பினர் என்ஜினீயர் கோபிநாத், ஊனமுற்றோர் சமூக சேவை நிர்வாகிகள் ரமேஷ், வைரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் உடல் ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாகவும் கண்பார்வையற்ற பெண்ணை குருடி என விளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், வாய் பேச இயலாதோரை வில்லன் நடிகர் துன்புறுத்தி அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைப்பது போல காட்சிகள் அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பூஜாவிற்கு இழைக்கப்படும் கொடுமைகளை தாங்க முடியாமல் அவரே தன் உயிரை எடுப்பதென்பது ஊனமுற்ற சமுதாயத்தினருக்கு தவறான தகவலாகவும், ஒத்து கொள்ள முடியாத ஒன்றாகவும் உள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர் தன்னம்பிக்கையுடன் உழைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் காலத்தில், ஊனமுற்றோரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நான் கடவுள் படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும். இயக்குனர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார். ஊணமுற்றோர் மற்றும் பிச்சைக்காரர்கள் குறித்து, தான் வாழ்க்கையில் நேரில் பார்த்தவற்றை மட்டுமே படமாக்கி்யுள்ளதாகவும், திரையில் காட்சிகளாகக் காட்டியுளளவை 100 சதவிகிதம் மிகைப்படுத்தல் இல்லாத உண்மை என்றும் தனது சமீபத்திய பேட்டியில் பாலா கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











