twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஜகத்தினை அழித்திடுவோம்'.. இது வன்முறையா?-சீமான்

    By Staff
    |

    Seeman
    'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற மகாகவி பாரதியும், 'கொடு வாளினை எடடா, மிகக் கொடியோர் செயல் அறவே' என்ற பாவேந்தர் பாரதிதாசனும் பாடியதைக்கூட வன்முறையாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று நீதிமன்றத்தி்ல் வாதாடினார் இயக்குநர் சீமான்.

    இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இயக்குநர் சீமான்.

    சீமான் வழக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவதால் அது பற்றி மாநில அறிவுரைக் கழகம்தான் விசாரணை மேற்கொள்ளும்.

    இந்த அமைப்பின் தலைவராக கே.எம்.நடராஜும், உறுப்பினர்களாக சித்திக் மற்றும் மருதமுத்து ஆகியோரும் உள்ளனர். இந்த அமைப்பில் வைத்து சீமான் விசாரிக்கப்படார். இதற்காக அவர் புதுவையிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்காக வக்கீல்கள் யாரும் ஆஜராக முடியாது. ஆனால் நண்பர்கள், உறவினர்கள் ஆஜராகி வாதிடலாம். எனவே சீமானுடன் அவரது நண்பரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தியாகு ஆஜராகி, சீமான் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்.

    அரை மணி நேர விசாரணைக்குப் பின் வெளியில் வந்த இயக்குநர் சீமான், கூடியிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:

    இந்த விசாரணையின் போது என்னைக் கைது செய்ததற்கான காரணங்களை அரசுத் தரப்பில் படித்துக் காட்டினார்கள். அவர்கள் சொன்ன குற்றங்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது என்பதை நாங்கள் விளக்கிச் சொன்னோம். எங்கள் தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

    புதுவை மாணவர்களிடம் நான் பேசியது உணர்ச்சியைத் தூண்டும் பேச்சாக உள்ளதே என்றார்கள்.

    அதே புதுவையில் வசித்த இரண்டு கவிஞர்கள் சொன்னதை எடுத்துச் சொன்னேன். 'கொலை வாளினை எடடா, கொடியோர் செயல் அறவே' என்று பாவேந்தர் சொன்னதும், 'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கர்ஜித்த பாரதியும் வன்முறையைத் தூண்டியதாக எடுத்துக் கொள்ள முடியுமா?.

    என் பேச்சு பிரிவினைவாதமல்ல... ஒரு உணர்ச்சிப் பூர்வமான சொற்பொழிவு. தமிழினம் கண்ணுக்கெதிரே அழிவதைப் பார்த்து இந்த உணர்ச்சியைக் கூட வெளிப்படுத்தவில்லை என்றால் நான் தமிழனாக இருக்க முடியாது என்றேன். என்னால் பொது அமைதிக்கு ஏதாவது பங்கம் வந்ததாகக் கூறமுடியுமா? பேச்சின் இறுதியில்கூட அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்றுதான் சொன்னேன்.

    காங்கிரசின் நிர்ப்பந்தம், கூட்டணிக்காக அரசியல் போன்ற சொந்த காரணங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறோம். இதுதொடர்பாக முடிவெடுத்து அரசுக்கு தங்கள் பரிந்துரையை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மீண்டும் வரும் 13ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணை நடக்கிறது. பார்க்கலாம்..." என்றார் சீமான். உடன் தியாகுவும் இருந்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X