11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர்ஸ்டார் போலீசில் புகார்
Recommended Video

சென்னை: தன் மனைவி ஜூலியை 11 பேர் கொண்ட கும்பல் கடத்தி சிறை வைத்திருப்பதாக பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி மாலை நண்பரை பார்க்கச் சென்ற பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரின் மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் பவர் ஸ்டாரை தொடர்பு கொண்டபோது நிலத்தை விற்க ஊட்டி வந்ததாகவும், தானே ஊர் திரும்பிவிடுவதாகவும் தெரிவித்தார். அதன்படி நேற்று காலை அவர் சென்னைக்கு திரும்பி வந்து காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார்.

ஊட்டி
ஊட்டியில் இருந்து போன் வந்ததையடுத்து ஜூலி போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் கிளம்பிச் சென்றார். இதையடுத்து தங்களின் பெற்றோர் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதாக பவர்ஸ்டாரின் மகள் தெரிவித்தார். இந்நிலையில் பவர்ஸ்டார் மட்டும் தான் ஊர் திரும்பியுள்ளார். ஜூலி வரவில்லை.

புகார்
தனது மனைவி ஜூலியை 11 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஊட்டியில் சிறை வைத்திருப்பதாக பவர்ஸ்டார் நேற்று இரவு சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவனும், மனைவியும் மாறி மாறி கடத்தல் புகார் தெரிவித்துள்ளனர்.

ஜூலி
பவர்ஸ்டார் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 3ம் தேதி சினிமா மக்கள் தொடர்பு அதிகாரி பிரித்தி என்னை தொடர்பு கொண்டு புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக தங்களிடம் பேச வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கோவையில் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து நான் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக 5ம் தேதி கோவை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றேன். அப்போது நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு திடீரென வந்த பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஆலம் மற்றும் 9 பேர் கும்பல் நீ கொடுக்க வேண்டிய 90 லட்சம் ரூபாய் பணத்திற்காக ஊட்டியில் உள்ள உன்னுடைய வீட்டை உடனடியாக எனக்கு பத்திரம் செய்து கொடு என்று கூறி என்னை மிரட்டினர். 6ம் தேதி என்னை காரில் வைத்து ஊட்டிக்கு அழைத்து சென்றனர் என்று பவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பணம்
உன் மனைவி ஜூலியை போனில் தொடர்பு கொண்டு உடனே ஊட்டிக்கு வரச் சொல் என்றும் கூறினார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரால் தனியாக வர இயலாது என்று கூறினேன். அவரை கோயம்பேடு பேருந்து நிலையம் வரச் சொல்லி காரில் ஊட்டிக்கு கடத்தி வந்து ஓட்டல் அறையில் அடைத்து சிறைவைத்து உள்ளனர். நான் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பதற்காக நேற்று சென்னை திரும்பி வந்தேன். கடத்தி வைக்கப்பட்டுள்ள என் மனைவி ஜூலியை பத்திரமாக மீட்டு பிரித்தி, ஆலம், செல்வின் மற்றும் 8 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பவர்ஸ்டார் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











