'கொமரம் புலி'யை மிரட்டும் தெலுங்கானா!

பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் தெலுங்கானா ஆதரவாளர்கள் அவர் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
ஏற்கெனவே அவரது மகன் நடித்த மகாதீரா படத்துக்கும் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் "கொமரம் புலி" படம் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த படத்தை தெலுங்கானா பகுதியில் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று தெலுங்கானா ஆதரவாளர்கள் அப்படம் வெளியான தியேட்டர்கள் முன்பு குவிந்தனர். பவன் கல்யாண் பேனர்களை அடித்து நொறுக்கினர். சில இடங்களில் அவரது படம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த ரகளை காரணமாக பவன் கல்யாண் படத்தை தெலுங்கானா பகுதிகளில் திரையிட முடியவில்லை. இதனால் படத்தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. பெருமளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட பிறகும், மக்கள் தியேட்டருக்கு வர பயப்படும் நிலை உருவாகியுள்ளது.
பவன் கல்யாண் படத்தை தியேட்டர்களில் ஓட விடாமல் தடுத்த தெலுங்கானா ஆதரவாளர்களுக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, "தனி மாநில ஆதரவு தலைவர்கள் பலர் தெலுங்கானாவில் படத்தை திரையிடுவதற்கு கோடிக்கணக்கில் பணம் கேட்கிறார்கள். தனி மாநில போராட்டம் என்ற பெயரில் அடாவடி வசூலில் இறங்குகிறார்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா தொண்டர்கள் பல இடங்களில் சிரஞ்சீவி உருவ பொம்மையை எரித்தனர்.
இதுகுறித்து இயக்குநர் எஸ்ஜே சூர்யா கூறுகையில், "அரசியலைத் தாண்டி அனைவரும் ரசிப்பது சினிமா. மக்களுக்குப் பிடித்த படமாக மாறிவிட்ட கொமரம் புலியின் வெற்றியைத் தடுக்க முடியாது," என்றார்.
அதிரடியான போலீஸ் அதிகாரியின் கதை கொமரம் புலி. இந்தப் படத்துக்கு கொமரம் புலி என்று பெயர் சூட்டியதற்கும் ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பியது நினைவிருக்கலாம்.
உண்மையில் இப்படத்தை புலி என்ற பெயரில் தமிழில்தான் எடுப்பதாக இருந்தார் சூர்யா. விஜய்தான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. பின்னர் அதில் சில குழப்பங்கள் ஏற்படவே, தெலுங்கில் வைத்து இயக்கி ஹிட் ஆக்கியுள்ளார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











