சாதி பெயர் சொல்லி ஓட்டுக் கேட்ட நடிகர் ராஜசேகர் கைது!

நடிகர் ராஜசேகர் காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஸ்ரீகாகுளம் டெக்கலி எனும் இடத்தில் நடந்த கூட்டத்தில், 'சிரஞ்சீவி எந்த ஜாதியோ, அதே ஜாதி வேட்பாளரைத்தான் நாங்களும் நிறுத்தியுள்ளோம். எனவே அவருக்கு வாக்களியுங்கள்' என்று கூறியுள்ளார்.
இதைக் கேள்விப்பட்டதும் பிரஜா ராஜ்யம் கட்சி பிரமுகர்கள் போலீஸில் புகார் செய்தனர். இதன் பேரில் ராஜசேகர் கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வந்த ராஜசேகர் நிருபர்களுக்கு விசாகப்பட்டினத்தில் அளித்த பேட்டியில், "30 ஆண்டுகள் சினிமாவில் உழைத்து சம்பாதித்ததை விட, கடந்த ஒரே மாதத்தில் தொகுதி சீட்டுகளை விற்று இரு மடங்கு அதிகமாக சிரஞ்சீவி சம்பாதித்து விட்டார். அவருடைய முதலமைச்சர் கனவு நிறைவேறாது. சின்னப் பசங்களை வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டுகிறார் அவர்" என்றார் ராஜசேகர்.
உடன் வந்த அவரது மனைவி ஜீவிதா, "முதல்வராகிவிட வேண்டும் என்ற பேராசைக்காரர் சிரஞ்சீவி. கட்சி ஆரம்பித்து கொஞ்ச நாளாவது அரசியல் செய்து பக்குவப்பட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிட வேண்டும். என்னைக்கூட முதல்வர் ராஜசேகர ரெட்டி தேர்தலில் போட்டியிடச் சொன்னார். ஆனால் கொஞ்ச நாள் அனுபவம் வந்த பிறகு நிற்கிறேன் என்று கூறிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











