மதுரை அருகே கார் விபத்தில் சிக்கினார் நடிகர் ராமராஜன்

நடிகர் ராமராஜன் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவு, மதுரையை அடுத்த கள்ளிக்குடி நல்லமநாயக்கன் பட்டி விலக்கு பகுதியில் ராமராஜன் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலைகுலைந்தது.
நான்கு வழிச் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார். ராமராஜன் மற்றும் அவரது உவியாளர் தாஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ராமராஜனையும், தாஸையும் மீட்டனர். போலீஸாரும்விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமராஜன் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ராமராஜன் அபாய கட்டத்தைத் தாண்டினார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











