நடிகர்களைக் கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசிய விஜயகுமார், விவேக், ஸ்ரீபிரியா உள்ளிட்ட நடிகர்- நடிகைகள் மீது வழக்குப்பதிவு மற்றும் கைது செய்து சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த அன்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நடிகைகள் பற்றி அவதூறு செய்தியை நாளிதழ் ஒன்று வெளியிட்டதை கண்டித்து நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடிகர் நடிகைகள் தரக்குறைவான ஆபாசமான வார்த்தைகளால் தாக்குதல் நடத்தினர்.
விஜயகுமார், சத்யராஜ், விவேக் மற்றும் ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பத்திரிகையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கி பேசியதோடு, பத்திரிகையாளர்களை ஒழித்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது.
இது தொடர்பாக கடந்த 8ம் தேதி பத்திரிகையாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
எனவே பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகர் நடிகைகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











