தொடர்ந்து விழும் அடி.. இந்தியன் 2 படக்குழு எடுத்திருக்கும் முடிவு.. வெளியானது அறிவிப்பு
சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியானது இந்தியன் 2 திரைப்படம். பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த அந்தப் படம் மோசமான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. முக்கியமாக வசூல் ரீதியாகவும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் படத்தை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும் என்று படக்குழு ஏகப்பட்ட விஷயங்களை செய்துவருகிறது. அந்தவகையில் லைகா தரப்பிலிருந்து அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இந்தியன் 2. இந்தப் படமானது கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. லைகா நிறுவனத்தின் பிரமாண்ட பட்ஜெட்டில், அனிருத்தின் இசையில் படம் உருவாகியிருந்தது. இப்படத்தின் முதல் பாகம் க்ளாசிக்காக பார்க்கப்படுவதால் கண்டிப்பாக அதுபோல்தான் இருக்கும் என்ற நினைப்பில் படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள்.

சொதப்பிய படம்: ஆனால் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை படம். ஷங்கரின் இயக்கத்தை பார்த்த பலரும்; அவரது காலம் முடிந்துவிட்டது எத்தனை காலம்தான் இதே டெம்ப்ளேட்டிலேயே படத்தை எடுப்பார் என்று கூறினார். மேலும் கமல் ஹாசனின் மேக்கப்பையும் கடுமையாக ட்ரோல் செய்து; படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்துவருகிறார்கள். இதனால் படக்குழு பெரும் அப்செட்டில் இருப்பதாக திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.
வசனமா இதெல்லாம்: முக்கியமாக படத்தில் இடம்பெற்ற சில சீன்கள் உதாரணமாக இலவச திட்டங்களை இழிவுப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதேபோல் இந்தியன் படத்தின் முதல் பாகத்துக்கு எழுத்தாளர் சுஜாதாவின் வசனங்கள் பெரிதும் உதவின. இந்தப் படத்தில் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து என இரண்டு எழுத்தாளர்கள் பணியாற்றியும் படத்தின் வசனங்கள் ஒன்றும் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே பலரின் கருத்து.
வசூலிலும் டல்: விமர்சன ரீதியாக இப்படி தொடர்ந்து ஒருபக்கம் இந்தியன் 2 அடி வாங்கிக்கொண்டிருக்க; மறுபக்கம் வசூலிலும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை 80 கோடியைகூட இதுவரை வசூலிக்கவில்லை என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே வரும் ஆகஸ்ட் மாதமே நெட்ஃப்ளிக்ஸில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படக்குழுவின் முடியும்: படத்தின் இன்னொரு மைனஸாக ரசிகர்கள் சொன்னது என்னவென்றால், படத்தின் நீளம். கிட்டத்தட்ட மூன்று மணி நேர டைம் ட்யூரேஷனோடு படம் வெளியானது. ஆனால் அது ஒர்க் அவுட் ஆகாததால் முதலில் 20லிருந்து 30 நிமிடங்கள்வரை படம் ட்ரிம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் படக்குழு இப்போது இன்னொரு முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி மேற்கொண்டு 12 நிமிடங்கள் கட் செய்திருப்பதாகவும்; இந்த வெர்ஷன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











