கார் நிறுத்திய தகராறு-சிம்பு வீட்டு வேலைக்காரர் கைது
நடிகர் சிம்புவின் வீட்டின் முன் நடந்த தகராறு தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் இந்தி பிரசார சபா சாலையில் சிம்புவின் வீடு உள்ளது. இந்த வீட்டை ஒட்டியுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிம்புவின் வீட்டு முன்பு ரோட்டில் நிறுத்துவது வழக்கம். இதனால் சிம்பு வீட்டாருக்கும் வாகனம் நிறுத்துபவர்களுக்கும் இடையே பெரும் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த திருமண மண்டபத்தில் நேற்று தொண்டு அமைப்பு ஒன்றின் சார்பில் 'ஆனந்த தீபாவளி' எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்க வந்த ராஜூ மற்றும் ரஞ்சித் இருவரும் சிம்பு வீட்டின் வாசலில் காரை நிறுத்தினர்.
இதற்கு சிம்புவின் வீட்டு வாட்ச்மேன் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே சிம்புவின் வீட்டிலிருந்த முரளி என்ற வேலைக்காரர் ராஜூ மற்றும் ரஞ்சித்தை அடித்து உதைத்தார்.
இது தொடர்பாக ராஜூ மற்றும் ரஞ்சித் இருவரும் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சிம்பு வீட்டிலிருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜூ மற்றும் ரஞ்சித் வற்புறுத்தியதையடுத்து முரளியை போலீசார் இன்று கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











