6 நாட்களில் 12 பாடல்கள்... அதிரவைக்கும் இளையராஜா - பாலா!
பாலா இயக்கும் புதிய படத்துக்காக வெறும் 6 நாட்களில் 12 பாடல்களை உருவாக்குகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
பொதுவாக இப்போதெல்லாம் ஒரு மாதத்துக்கு ஒரு பாடல் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு ட்யூன் உருவாக்குவது புதிய ட்ரெண்டாகிவிட்டது.
சில இசையமைப்பாளர்கள் செய்யும் தாமதத்தால் படங்கள் ஆண்டுக்கணக்கில் தள்ளிப் போனதும் உண்டு.

62 படங்கள்...
ஆனால் இளையராஜா அன்றும் இன்றும் என்றும் இசையமைக்க பெரிதாக அவகாசமெடுத்துக் கொள்வதில்லை. ஒரே ஆண்டில் 62 படங்கள் வரை இசையமைத்த சாதனைக்கு சொந்தக்காரர் ராஜா. ஆனால் அதைக்கூட அவர் காட்டிக் கொண்டதே இல்லை.

பாலா படம்
இப்போது பாலா இயக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கும் பணியில் பிஸியாக உள்ளார். இந்தப் படம் தமிழ் மண்ணின் கலையான கரகாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது.

6 நாட்களில்
இந்தப் படத்துக்காக வெறும் ஆறு நாட்களில் 12 பாடல்களை உருவாக்குகிறார் இளையராஜா. தொடர்ந்து அந்தப் பாடல்களுக்கான குரல்பதிவுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமையும்
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா உலகம் இயங்குவதில்லை. ஆனால் நேற்று ஞாயிற்றுக் கிழமையும் கூட இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்து இசைப் பணியைத் தொடர்ந்தார். பாலாவும் வந்திருந்து பாடல் உருவாவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.

என்ன பெயர்...
சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு கரகாட்டம் என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பெயர் மாறக்கூடும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











