நாளை தேர்தல்... திரையுலகுக்கும் 'லீவு'!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரங்கள், இதர கலைஞர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக நாளை தமிழ் திரையுலகுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் படப்பிடிப்புகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நடிகர், நடிகைகள் பலர் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். இதற்காக சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டு போட்டு வருகிறார். இம்முறையும் ராணா படவேலைகளுக்கு இடையில் நாளை ஓட்டுப் போடுகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தனது வாக்கை குடும்பத்தினருடன் பதிவு செய்கிறார்.
நடிகர் கமல் ஆழ்வார் பேட்டையில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார். கடந்த முறை இவரது ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டது நினைவிருக்கலாம்.
தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சாலிகிராமம் ஆவிச்சி பள்ளியில் ஓட்டுப் போடுகிறார். இது விருகம்பாக்கம் தொகுதிக்குள் வருகிறது.
நடிகர் அஜீத்தும் அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகின்றனர். அடையார் பாரத் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications