நான் விலகவில்லை.. மீண்டும் வருவேன்.. 12th Fail நடிகர் விக்ராந்த் மஸ்ஸி அறிவிப்பு!
சென்னை: 12th ஃபெயில் படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவை விட்டு விலகுவதாக செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இதுகுறித்து நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சினிமாவை விட்டு விலகவில்லை. அந்த அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி 2003ம் ஆண்டில் இருந்து சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது 12th fail தான் படம் தான். விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மேதா ஷங்கர், கீதா அகர்வால், சாம் மோகன், விகாஸ் திவாகர் ஆகியோர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியான இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம், ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் ஷர்மாவைப் பற்றிய அனுராக் பதக் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.56 கோடிக்கு மேல் வசூலானது.

The Sabarmati Report : இந்த படத்தை தொடர்ந்து, Sector 36, The Sabarmati Report ஆகிய படத்தில் நடித்தார். இதில் The Sabarmati Report படம் நவம்பர் 15ந் தேதி தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த வெற்றிப்படத்தை கொடுத்து, சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெற்றுவரும் நேரத்தில், திங்கட்கிழமை விக்ராந்த் மாஸ்ஸி, சினிமாவை விட்டு விலகுவதாக செய்தி வெளியானது. இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது, இணையவாசிகள் இத்தனை ஆண்டுகள் இந்த இடத்தை பெற கடுமையாக உழைத்துவிட்டு, வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என கொந்தளித்தனர்.
தவறாக புரிந்து கொண்டார்கள்: இந்நிலையில், நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஓய்வு பெறுகிறேன் என்று சொன்னதை மக்கள் தவறாக புரிந்து கொண்டு, சினிமாவை விட்டு விலகுவதாக நினைத்துக்கொண்டார்கள். எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. அந்த சினிமா தான் இப்போது என்னிடம் இருப்பதை அனைத்தையும் கொடுத்தது அப்படி இருக்கும் போது நான் எப்படி விலகுவேன். இப்போது எனக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதால், எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. அதைத்தான் நான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், என் அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, நடிப்பில் இருந்து விலகுகிறேன், ஓய்வு பெறுகிறேன் என்றெல்லாம் செய்தி பரவியது அது உண்மை இல்லை என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த அறிவிப்பால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'தி சபர்மதி ரிப்போர்ட்' படத்தில் அவருடன் இணைந்து நடித்த ராஷி கண்ணா, இந்த நேரத்தில் இடைவெளியே சிறந்தது - நீங்கள் இன்னும் ஆச்சரியமாக இருப்பீர்கள் என்ற கருத்தை பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுக்க விக்ராந்திற்கு மிகுந்த தைரியம் இருக்க வேண்டும் அதற்கு என் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











