வாலிபர் செக்ஸ் டார்ச்சர்-கோர்ட்டில் சாதனா ஆஜர்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் சாதனா. தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
சென்னை வடபழனியில் தனது பூர்வீக வீட்டில் சாதனா குடியிருந்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். இவரது வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அதில் கடந்த ஆண்டு ஸ்ரீகாந்த் என்ற வாலிபரும் அவரது தாயும் குடிவந்தனர். ஆரம்பத்தில் சாதனாவிடம் மரியாதையாக நடந்து கொண்ட இவர், போகப்போக அவரைப் பார்த்து அடிக்கடி கண்அடிப்பது, சிரிப்பது, இரு பொருள் படப் பேசுவது, சீண்டுவது, சில்மிஷமாக பேசுவது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டாராம்.
ஒரு கட்டத்தில் ஆபாசமாக கமென்ட் அடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் கடுப்பான சாதனா, வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து பெண் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4ன் கீழ் ஸ்ரீகாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் வீட்டை காலி செய்தார்.
வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் மீண்டும் சாதனாவை பின்தொடர்ந்து கமென்ட் அடிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17 வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அருணாச்சலம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயரத்தினகுமார் ஆஜரானார்.
அப்போது சாதனா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











