திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: போலீஸுடன் மோதல்
சென்னையில் இன்று நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலின்போது போலீஸாருக்கும், இயக்குநர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. பாரதிராஜா தலைமையில் ஒரு அணி களம் இறங்கியது. பாரதிராஜாவை எதிர்த்து ஆர்.சி. சக்தி சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்தார்.
தேர்தலுக்கு முன்பாகவே இயக்குநர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. போலீஸுக்கு விவகாரம் போனது.
இந்த நிலையில், பாரதிராஜா சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதை எதிர்த்து ஆர்.சி. சக்தி தலைமையிலான அணியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், வக்கீல்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தேர்தல் நடந்தது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரதிராஜா அணி சார்பில் ஆர்.கே. செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், வி.சேகர் உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்கள் தேர்தல் வேலை பார்த்தனர். அதே போன்று ஆர்.சி. சக்தியும் தனது அணி வெற்றி பெற வேண்டும் என களத்தில் நின்றார்.
நாளைய இயக்குனர்கள் அணி என்ற பெயரில் உதவி இயக்குனர்கள் 18 பேர் கொண்ட குழுவினர் தேர்தலில் களமிறங்கினர்.
பரபரப்பான சூழல் நிலவியதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
இரு அணியினரும் வாக்களிக்க வருவோரை மாறி மாறி தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறி பிரசாரம் செய்தனர். இதைப் பார்த்த போலீஸார், அவர்களிடம் சென்று இப்படி செய்யக் கூடாது, விலகி நில்லுங்கள் என்று கூறினர். ஆனால் அதை இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து போலீஸார் தடுப்புகளை கொண்டு வந்து வைத்தனர்.
இதையடுத்து இயக்குநர்ளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், வி.சேகர் ஆகியோர் போலீஸாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் போலீஸார் அதைக் கண்டு கொள்ளாமல் தடுப்புக் கம்பிகளை வைத்து வாக்களிக்க வருவோருக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
தொடர்ந்து தேர்தல் நடந்தது. இன்று மாலைக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











