இளையராஜா புகார்: எக்கோ நிறுவன 'எம்டி'க்கு முன் ஜாமீன்!

900 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை வெளியீட்டு உரிமையை எக்கோ நிறுவனம் பெற்றிருந்தது. பெரும்பாலான படங்களின் இசையை எக்கோதான் வெளியிட்டுள்ளது.
இந்த இசையை சிடியாக வெளியிடும்போது தனக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தரவேண்டிய ராயல்டி குறித்து எக்கோவுடன் ஒப்பந்தம் போட்டதாகவும், ஆனால் அதை மீறி 20 ஆண்டுகளுக்கும் மேல் தனக்கு ராயல்டி தராமல் ஏமாற்றி வந்துள்ளது எக்கோ என இளையராஜா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எக்கோ நிறுவனத்தில் அதிரடி சோதனைகள் செய்து ரூ 25 லட்சம் மதிப்புள்ள இளையராஜாவின் சிடிகள், சில மாஸ்டர் பிரிண்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் எக்கோ நிறுவன இயக்குனர் ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், "எங்களுக்கும் இளையராஜாவுக்கும் இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே சிவில் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையாக இருக்கும்போது இளையராஜா புகார் அளித்து இருப்பது தவறானது. நாங்களும் சட்டப்பூர்வ நடிவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
இவ்வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், இனி இளையராஜாவின் அனுமதி பெறாத பாடல்களை வெளியிட மாட்டோம் என்றும் எக்கோ நிறுவனம் சார்பில் உறுதி கூறப்பட்டதால், ராஜசேகரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











