ஆபாசப் பேச்சு: சூர்யா உள்ளிட்ட நடிகர் - நடிகைகள் மீது இன்று 8 வழக்குகள் பதிவு

விபத்தார வழக்கில் கைதான நடிகை புவனேஸ்வரி கூறியதன் அடிப்படையில், விபச்சாரம் செய்யும் நடிகைகள் என படத்துடன் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதைக் கண்டிப்பதாகக் கூறி நடிகர் சங்கத்தில் கூடிய நடிகர் - நடிகைகள் மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களைத் திட்டித் தீர்த்தனர்.
குறைந்தபட்சம், தவறாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைத் திட்டுகிறோம் என்று கூடக் குறிப்பிடாமல் சகட்டு மேனிக்கு அனைத்துப் பத்திரிகையாளர்களையும் திட்டினர்.
சூர்யா, விவேக், சத்யராஜ், ஸ்ரீபிரியா, சேரன், விஜயகுமார், அவர் மகன் அருண் விஜய் ஆகியோர் கீழ்த்தரமாகவும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பேசினர்.
இதற்கான வீடியோ ஆதாரங்களைப் பெற்ற பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள், நடிகர்களை கைது செய்யக் கோரி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் செய்தனர். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடு்க்கப்படவில்லை. மேலும் புகாரில் சிக்கிய நடிகர் நடிகைகள் தங்களை ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமாகக் காட்டிக் கொண்டு வந்தனர்.
எனவே இவர்களைக் கைது செய்ய உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தவிர அவதூறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யக் கோரும் வழக்கில் நேற்று முன்தினம் கமிஷனருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஆபாசமாக பேசிய நடிகர்கள் அனைவர் மீதும் வெவ்வேறு பிரிவுகளில் எட்டு வழக்குகள் பத்திரிக்கையாளர்கள் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் குறித்த விவரங்கள் விரைவில் பத்திரிகையாளர் அமைப்புகளால் வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











