நடத்தையில் சந்தேகம்-நடிகையை கொன்ற கணவர் கைது!

பிரபல கன்னட டெலிவிஷன் நடிகை மஞ்சுளா. இவர் பெங்களூர் நந்தினி லே-அவுட்டை சேர்ந்த காண்டிராக்டர் யோகேஷ் (வயது 33) என்பவரை காதலித்து திருமணம் செய்தவர். 31 வயதான மஞ்சுளா கன்னட சேனல்களில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். மஞ்சுளாவுக்கு யோகேஷ் 2-வது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆகஸ்டு 12-ந் தேதி நந்தினி லே-அவுட் போலீசில் தனது மனைவியை காணவில்லை என்று யோகேஷ் பொய் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் மஞ்சுளாவை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறினர். இதனால் நடிகை மஞ்சுளா என்ன ஆனார் என்பது பற்றி தகவல் இல்லாமல் இருந்து வந்தது.
பின்னர் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். இதில், யோகேஷ் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, போலீசில் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் எல்லா உண்மைகளையும் யோகேஷ் ஒப்புக்கொண்டார்.
மஞ்சுளா கொலை தொடர்பாக அவரது கணவர் யோகேஷ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த விக்ரம் (22), அனில் (22), ரதீஷ் (26), அருணா (22), பிரகாஷ் (25) ஆகிய 6 பேர்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலைக்காக கூலிப்படைக்கு கைமாறிய ரூ.6 லட்சம் மற்றும் யோகேசை கைது செய்தபோது, அவரது வீட்டில் இருந்து ரூ.52 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்...
யோகேஷ் கொடுத்த வாக்குமூலத்தில், "நான் மஞ்சுளாவுக்கு 2-வது கணவர். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் சந்தேகம் குறுக்கிட்டது.
மஞ்சுளா எனக்கு உண்மையாக இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே மஞ்சுளாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதற்காக கூலிப்படையை ஏற்பாடு செய்தேன்.
கூலிப்படையினர் கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் பிணத்தை காரில் எடுத்துச்சென்று தாவணகரே அருகே குழிதோண்டி புதைத்து விட்டனர்...'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











