அடுத்த ஆண்டு முதல் சினிமாக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாராம் முதல்வர் - சொல்கிறார் அமைச்சர்

ஜெயலலிதா முதல்வரான பிறகு சினிமாக்காரர்களை ஒரு தூரத்திலேயே வைத்திருப்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால் இவரும் இந்த விஷயத்தில் கருணாநிதிக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்க ஆரம்பித்துள்ளார்.
சினிமாக்காரர்களின் பொய்யான கோரிக்கைகளுக்கெல்லாம் உடனடியாக நிதியுதவி, சலுகை என்று அள்ளிவிட ஆரம்பித்துள்ளார். சரத்குமார் பரிந்துரையோடு வந்தார்கள் என்பதற்காகவே சென்னை திரைப்பட விழா நடத்துவோருக்கு ரூ 25 லட்சம் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. பாரதிராஜா, அமீர் போன்றவர்களின் பெயர்களை பொய்யாக உபயோகித்து இந்த நிதியைப் பெற்றுள்ளது இந்த கோஷ்டி.
அடுத்து ரூ 50 லட்சம் வரை கமல்ஹாசன் தலைமையிலான பிக்கி அமைப்புக்கு தர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வரும் நாட்களில் தியேட்டர்களுக்கு சலுகை, படப்பிடிப்புக் கட்டண சலுகை, வீட்டு வசதி என வரிசையாக கோரிக்கைகள் வைத்துள்ளனர் சினிமாக்காரர்கள். இவற்றை அடுத்த ஆண்டு முதல் நிறைவேற்றித் தரப் போகிறாராம் ஜெயலலிதா.
இதனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கிவைத்த அமைச்சர் கூறுகையில்,
"சர்வதேச திரைப்பட விழாவுக்கு, முதல்வர் ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கியிருக்கிறார். இதுதொடர்பாக அவரை சரத்குமார், சுஹாசினி போன்றவர்கள் சந்தித்தபோது, கலைவாணர் அரங்கைப்போல் ஒரு அரங்கு வேண்டும் என்றும், உதவித்தொகையை இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் 2 கோரிக்கைகளை வைத்தார்கள்.
முதல்வரை நம்புங்கள். அடுத்த ஆண்டில் நீங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பார்," என்றார்.
வரி உயர்வு, பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்வு என மக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில், மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை சினிமாக்காரர்களுக்கு தூக்கிக் கொடுக்கிறார் ஜெயலலிதா என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











