தமிழ் பெயர்..வரி விலக்கு செல்லும்!
தமிழ் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் அதன் இணைச் செயலாளர் புகழேந்தி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,
படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 2006ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்னர் 4 மாதம் கழித்து மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. பழைய படம், புது படம் எது வேண்டுமானாலும் தமிழ் பெயர் இருந்தால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அடிப்படையில் 1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட ரத்தக்கண்ணீர்', மனோகரா' உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் மன்மதன்', போக்கிரி' ஆகிய படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டன.
அரசு உத்தரவின் எதிரொலியாக ஜில்லுன்னு ஒரு காதல், தமிழ் எம்.ஏ, எம்டன் மகன் ஆகிய பெயர் கொண்ட படங்கள் வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக சில்லுன்னு ஒரு காதல்', கற்றது தமிழ்', எம்மகன்' என்று தமிழில் பெயரை மாற்றி வைத்து வரி விலக்கைப் பெற்று விட்டனர்.
இந்த வரி சலுகை என்பது படங்களிடையே பாரபட்சமாக உள்ளது. பொதுநலன் கருதிதான் வரிச் சலுகை வழங்க வேண்டும். மற்றபடி வரி சலுகை வழங்க சினிமா சட்டத்தில் இடமில்லை. தமிழ் பெயர் படங்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, சமுதாய வளர்ச்சிக்கோ பயன்படும் வகையில் இல்லை.
இவ்வாறு வீணாக வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை கேளிக்கை வரி இழப்பு ஏற்படுகிறது. 2003-2004ல் மட்டும் ரூ.75 கோடி கேளிக்கை வரி கிடைத்தது. ஆனால் 2006ம் ஆண்டு இது 16 கோடியாக குறைந்து விட்டது.
தமிழ் பெயர் என்பதற்காக வரி சலுகை வழங்குவது அரசுக்கு வரி இழப்பு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது. எனவே தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எந்தப் படங்களுக்கு வரி சலுகை அளிப்பது, எதற்கு அளிக்க தேவையில்லை என்பதை முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தனர்.


Click it and Unblock the Notifications











