பெண் சிங்கம் வருவாய்-நிவாரண நிதிக்கு வழங்கிய கருணாநிதி!
தனது கதை வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் திரைப்படத்துக்காக கிடைத்த சம்பளம் 50 லட்சம் ரூபாயை, அருந்ததிய சமுதாய மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிப்பதற்காக செலவழிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2004-2005ம் ஆண்டில் 'மண்ணின் மைந்தன்' படத்துக்கு நான் திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய்- 'கண்ணம்மா' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய், ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்துக்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கும்படி செய்தேன்.
அதுபோலவே 9-7-2008 அன்று 'உளியின் ஓசை' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாய் வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியற்றும் மூத்த கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.
சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எனக்கு கிடைத்த சொந்தப் பணத்தில் இருந்து ஐந்து கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைத்து உருவாக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 2005ம் ஆண்டு நவம்பர் முதல் இருவரை 1697 நலிந்தோர்க்கு மருத்துவ மற்றும் கல்வி உதவி நிதியாக வழங்கிய மொத்த நிதி ஒரு கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஆகும்.
அதுபோலவே என் சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை புத்தக விழாவில் பதிப்பாளர் சங்க சார்பில் விருதுகள் வழங்க அளித்து உள்ளேன்.
மேலும் எனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தமிழ் செம்மொழி நிறுவனத்துக்கு வழங்கி அதன் மூலம் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளேன்.
அருந்ததிய மாணவர்கள் படிப்புக்காக....
அந்த வரிசையில் தற்போது தயாரிக்கப்படும் 'பெண் சிங்கம்' திரைப்படத்துக்காக எனக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாயை தமிழக அரசு முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்ப்பதற்காக இன்று ஒப்படைக்கின்றேன்.
தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாய மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க அரசு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உதவிட வேண்டும் என்று என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, தற்போது முதலமைச்சர் நிவாரண நிதியிலே நான் ஒப்படைத்த தொகை ஐம்பது லட்சம் ரூபாயை 'தூய்மைப்பணி புரிவோர் (அருந்ததியர்) நல வாரியத்தின்' மூலமாக செலவழிக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











