இலங்கை செல்ல எதிர்ப்பு: சல்மானுக்கு எதிராக ஊர்வலம் நடத்திய தமிழர்கள் கைது!

இந்திய சர்வதேச திரைப்பட விழா இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டார். இந்திய சர்வதேச திரைப்பட விழா இலங்கையில் நடைபெறுவதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் பிரமுகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டு முன்பு சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மற்றவர்களின் மனம் புண்படுமாறு எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன் என்று அமிதாப்பச்சன் தெரிவித்தார்.
தூதர் பொறுப்பிலிருந்து விலகினார்
ஆனால் உறுதியான எந்தவொரு அறிவிப்பையும் அமிதாப்பச்சன் தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த மாதம் 11ம் தேதி அன்று மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தூதராக நியமிக்கப்பட்ட அமிதாப்பச்சன் அதிலிருந்து விலகினார். இதனையடுத்து புதிய விழா தூதராக பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டை முற்றுகையிட்டு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் அமைப்புகள் தெரிவித்தன.
இதனால் சல்மான் கான் வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை 10.30 மணிக்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சல்மான்கான் வீடு நோக்கி திரளான தமிழர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக கூறி அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.


Click it and Unblock the Notifications











