twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிமுகவுக்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்களை வளைக்கும் முயற்சியில் திமுக

    By Sudha
    |

    Rajinikanth
    திருச்சி: சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தனக்கு ஆதரவான வாக்குகளை தக்க வைக்கும் முயற்சிகளில் திமுக தீவிரமாகியுள்ளது. அதில் ஒரு முயற்சியாக ரஜினிகாந்த் ரசிகர்களை திமுகவுக்கு சாதகமாக திருப்பும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்பட்டாலும் திருச்சியில் பகிரங்கமாகவே இது நடைபெறுகிறது. அமைச்சர் கே.என்.நேரு இந்த முயற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    ரஜினிகாந்த் இதுவரை தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவரும் தமிழக அரசியலில் ஒரு அங்கமாக மாறி பல வருடங்களாகி விட்டது. அவரை வைத்து அரசியல் நடந்து வருவதை அவரும் உணர்ந்திருக்கிறார், அவரது ரசிகர்களும் உணர்ந்துள்ளனர்.

    தேர்தல் சமயங்களில் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி வழக்கமாக எழும். ஆனால் தான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும், ரசிகர்கள் தங்கள் மனசாட்சிப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்றும் ரஜினி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய வாக்கு வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ள ரஜினி ரசிகர்களின் வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் பல விதங்களில் முயல்வது ஒரு வழக்கமாக மாறியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போதைய தேர்தலில் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக வளைக்கும் முயற்சியில், கட்சிகள் இறங்கியுள்ளன. குறிப்பாக திமுக இறங்கியுள்ளதாம்.

    முதல்வர் கருணாநிதியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் தொடர்நது பங்கேற்று வருவதை ரசிகர்களிடம் கூறி ரஜினி, திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார்கள் திமுகவினர் என்று கூறப்படுகிறது.

    இதை நிரூபிக்கும் வகையில், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று திமுகவும், ரஜினி ரசிகர் மன்றமும் இணைந்து பொங்கல் விழாவை நடத்தியுள்ளன.

    திருச்சி திருவானைக்காவல்-கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகேயுள்ள அழகிரிபுரத்தில் திமுகவினரும், புரட்சி மாவீரன் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தினர்.

    இதில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசுகையில், விழாவை திமுகவினரும், ரஜினி ரசிகர் மன்றத்தினரும் இணைந்து நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி சிறந்த ஆன்மிகவாதி; நல்ல மனித நேயமிக்கவர்.

    திருச்சியில் சிவாஜி கணேசன் சிலைத் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கும், கமலஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் வருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார் நேரு.

    விழா நடந்த இடம் அதிமுக சற்று பலமாக உள்ள பகுதியாம். இந்த இடத்தில் வைத்து ரஜினி ரசிகர்களை இணைத்துக் கொண்டு திமுக விழா நடத்தியுள்ளதால் அதிமுவுக்கு எதிராக ரஜினி ரசிகர்களை திருப்பும் செயலாக இது பார்க்கப்படுகிறது.

    மேலும், சிவாஜி கணேசன் சிலைத் திறப்பு விழாவுக்கு எப்படியாவது ரஜினியை வரவழைத்து விட்டால் திருச்சியில் ரஜினி ரசிகர்கள் வாக்கு திமுகவுக்குத்தான் என்ற எண்ணமும் திமுகவினர் மத்தியில் பரவியுள்ளது.

    ரஜினியை வைத்து நடத்தும் இந்த அரசியல், திமுகவுக்கு தேர்தலில் எந்த அளவுக்கு உதவப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

      English summary
      In Trichy, DMK had celebrated Pongal festival with Rajini fan club. It has raised many questions, because of the timing of the function. Sources say that, DMK is wooing Rajini fans to garner their support in the assmbly polls. Not only in Trichy all over TN, DMK is attempting to divert the Rajini fan clubs in support of the party. Citing the proximity between Rajinikanth and CM Karunanidhi, DMK cadres are canvassing the fans that Rajini is supporting Karunanidhi, soruces say.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X