twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உயிரின் பாடலாக ஓயாது ஒலிக்கும் ஆனந்த ராகம்!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    தாமரை செந்தூர்ப்பாண்டி என்றோர் எழுத்தாளரை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். வார இதழ்களில் அவருடைய கதைகள் அடிக்கடி கண்ணிற்படும். எண்பதுகளில் அப்பெயர் நன்கு பழக்கமான ஒன்று. வெகுமக்கள் தளத்தில் பொருட்படுத்தத்தக்க கதைகள் எழுதியவரான அவருடைய கதையும் திரைப்படமாகியிருக்கிறது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டுப் பொங்கலுக்கு வெளியான 'ஆனந்த ராகம்' என்னும் திரைப்படம்தான் அது. தாமரை செந்தூர்ப்பாண்டியின் கதைகளில் திருநெல்வேலிப் பேச்சு வழக்கு இயல்பாக வெளிப்படுகிறது. கடலோரப் பரதவர்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவராகத் தெரிகிறார். ஆனந்த ராகத்தின் கதைச்செறிவு ஓர் எழுத்தாளரின் எழுதுகோல் முனையிலிருந்து வெளிப்பட்டதாகத்தான் இருக்க முடியும். மலையாளச் 'செம்மீன்' திரைப்படத்தின் திணைப்பொருட்களை உள்ளடக்கிய தமிழ்ப்படமாக அப்படத்தைச் சொல்ல முடியும். மீனவர் வாழ்க்கையைக் கதைப்பொருளாகக்கொண்டு அவ்வப்போது சில படங்கள் வருகின்றன. படகோட்டியிலிருந்துதான் இந்தப் போக்கு உறுதிப்பட்டது என்று நினைக்கிறேன். அவ்வகைமைப் படங்களில் ஆனந்த ராகத்திற்குத் தவிர்க்க முடியாத இடம் உண்டு.

    தன் தங்கையைக் கண்போல் போற்றி வளர்ப்பவன் வடிவேல். அதற்கேற்ப அவள் பெயரும் கண்ணம்மாதான். தங்கையை அவ்வூர்ப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்க வைப்பவன். கட்டுமரத்தில் அன்றாடம் கடற்பாட்டுக்குச் சென்று ஐந்தும் பத்துமாய்ப் பொருளீட்டுபவன். குடிசை வாழ்க்கை. வடிவேல் நல்ல உழைப்பாளி என்றாலும் மாலையில் ஊராரோடு கள்ளுக்கடையில் ஐக்கியமாகுபவன். காலநிலை தெரியாத ஒரு நாளில் கடலுக்குச் செல்லும் வடிவேல் புயலில் சிக்கிக்கொள்கிறான். கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வடிவேலினை முத்தையா காப்பாற்றி கரைக்குக் கொண்டு வருகிறான். முத்துக்கு உறவுகளில்லை. ஆங்காங்கே இட்டார் பணிகளைச் செய்து நிலையின்றித் திரிபவன். கடுமையான உழைப்பாளி. "என் உயிரைக் காப்பாற்றியவன் நீ. உனக்கோ உறவுகளென்று யாருமில்லை. பேசாமல் எங்களோடு இருந்துவிடு. யோசிச்சுச் சொல்லு," என்று வேண்டுகிறான் வடிவேல். முத்தையனின் பண்புகளால் ஈர்க்கப்பட்ட கண்ணம்மா அவன் தங்களோடு தங்கவேண்டும் என்றே விரும்புகிறாள். அவன் காய்ச்சலில் அவதிப்படும்போது தலைக்கும் கால்களுக்கும் தைலம் தேய்த்து விடுகிறாள். "அண்ணன் கேட்டதுக்கு என்ன முடிவு பண்ணியிருக்கீங்க...?" என்று காதலோடு கேட்கும் கண்ணம்மாவின் அன்புக்கு முத்தையனும் கட்டுப்படுகிறான். அவர்களோடு இருக்க ஒப்புக்கொள்கிறான்.

    1980's classics: Ananda Raagam

    "இருவரும் சேர்ந்து கடலுக்குச் செல்வோம்... உனக்கு வேண்டிய கூலியோ பங்கோ வாங்கிக்கொள்," என்பது வடிவேல் தரும் வாய்ப்பு.

    "இங்க பாரு வடிவேலு... நான் வஞ்சகமில்லாமல் உழைப்பேன்... அதுக்குச் சம்பளம் கொடுத்து என்னைக் கூலிக்காரன் ஆக்கிடாத... எனக்குத் தேவை உண்ண உணவு... உடுக்க உடை.... படுக்க பாய்.... அவ்வளவுதான்... மரியாதையோட நடத்தினால் அதுவே போதும்," என்கிறான் முத்து. முன்னொரு காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது இந்தக் குணவார்ப்பில்தான் தெரிகிறது. உழைப்பின் வழியே அடையும் துறவு என்றுதான் இதைக் கருதவேண்டியிருக்கிறது.

    கண்ணம்மாவின் தோழியான இலட்சுமிக்கும் முத்துமீது விருப்பம். "இப்படியே இருப்பதா... உனக்கென்று ஏதேனும் செய்துகொள்," என்று அவனிடம் தனித்துரைக்கிறாள்.

    1980's classics: Ananda Raagam

    "என் நலத்தை முன்வைத்து எண்ணும் உன்னைப்போன்றவள் இருக்கும்போது எனக்கென்ன வேண்டும் ?" என்று அவளிடம் அன்பாய்க் கூறுகிறான் முத்து. அந்த இளக்கத்தை அவன் தன்மீது கொண்ட காதலாகக் கருதிக்கொள்கிறாள் இலட்சுமி. அப்பகுதி நிலக்கிழாரிடம் ஓட்டுநராகப் பணிபுரியும் பாண்டிக்குக் கண்ணம்மா மீது மாளாத காமம். அடைந்தால் அவளை அடைவேன் அன்றேல் அவளை யாரோடும் வாழவிடமாட்டேன் என்று வஞ்சினம் பூண்டவன். கண்ணம்மாவை அடையும் நோக்கில் அவளைப் பள்ளி வழியில் மறித்து வல்லுறவுக்கு முயல்பவன். அவ்வமயம் அங்கே வரும் முத்து அவனை அடித்துதைத்து அனுப்புகிறான். இனிமேல் அவ்வூரிலிருந்தால் வடிவேல் தன்னைக் கொன்றுவிடுவன் என்றஞ்சும் பாண்டி நிலக்கிழாரின் ஊர்க்குப் பெயர்கிறான் .

    வடிவேலும் முத்தும் சேர்ந்து மீன்பிடிக்கச் செல்கின்றார்கள். ஐந்துக்கும் பத்துக்குமாய்க் கிடைத்த மீன்பாடு மாறிவிட்டது. ஐந்நூற்றுக்கும் ஆயிரத்துக்கும் மீன்கள் கிடைக்கின்றன. பணம் கொட்டுகிறது. முத்து வந்த நேரம் வடிவேலுக்கு நற்பேற்று மழை. வீடு வாங்குகிறான். மாமன் மகளை மணம் முடிக்கிறான். வடிவேல் தன் புது மனையாளோடு திருச்செந்தூர் கன்னியாகுமரி என்று ஊர்சுற்றச் சென்றுவிட, கண்ணம்மாவும் முத்தும் காதற் பறவைகளாய் மகிழ்ந்து திளைக்கின்றனர். வடிவேல் புது மாப்பிள்ளை என்பதால் கடலுக்குப் போவதில்லை. முத்து தனியொருவனாய்க் கடல் சென்றதால் மீன்பாடு குறைகிறது. "உடையவன் பார்க்காட்டி ஒருமுழக் கட்டைதான்," என்று கடிந்துகொள்கிறான் வடிவேல். வடிவேல் வருமுன்னே முத்து சாப்பிடுவதைக் கண்ட வடிவேலின் மனைவி, "முதலாளி சாப்பிடும் முன்னே வேலைக்காரன் சாப்பிடற கொடுமை இந்த வீட்டுலதான் நடக்குது..,' என்று சாடை பேசுகிறாள். இவற்றுக்கெல்லாம் வீட்டுப் பணிப்பெண் இலட்சுமிதான் முத்துக்கு ஆறுதல் சொல்கிறாள். கண்ணம்மாவுக்கும் முத்துக்கும் இடையிலுள்ள காதலை அறிந்துவிட்ட இலட்சுமி தன்னைத் தேற்றிக்கொண்டு அவர்களுக்கு உதவுகிறாள்.

    1980's classics: Ananda Raagam

    கண்ணம்மாவுக்குக் கட்டிவைக்கத்தான் ஒருவனை வீட்டோடு வைத்திருக்கிறாயா என்ற கேள்வி கள்ளுக்கடையில் வடிவேலிடம் வைக்கப்படுகிறது. "போயும் போயும் ஒரு கூலிக்காரனுக்கா என் தங்கையைக் கொடுப்பேன்... செல்வச் சீமானுக்குத்தான் என் தங்கையைக் கட்டிவைப்பேன்..," என்று சூளுரைக்கிறான். போதையில் வரும் வடிவேலு "முத்து... நீ இங்கிருந்து போய்விடு...," என்கிறான். "அண்ணா... ஏன் ?" என்று கண்ணம்மா கண்ணீரோடு கேட்கையில், "உழைச்சதுக்காக சோறு கொடுத்தேன்... துணி கொடுத்தேன்... இருக்க இடம் கொடுத்தேன்... என் தங்கச்சியைக் கொடுக்க முடியாது...," என்கிறான். முத்து மனம்நொந்து வெளியேறுகிறான். வேறெங்கும் செல்லத் தெரியாத முத்து கடற்கரையிலேயே பராரியாக உலாத்துகிறான். பிறர் கொடுக்கும் சிறுசிறு வேலைகளில்கூட அவனால் மனம் செலுத்த முடியவில்லை. நீலக் கடலிடை நீல விசும்பிடை நின்முகங்கண்டேன் கண்ணம்மா என்று அலைகிறான்.

    பாண்டியன் தான் பணியாற்றும் நிலக்கிழாரின் நோயுற்ற மகனுக்குக் கண்ணம்மாவைக் கட்டிவைக்கும்படியான சூழ்ச்சியைச் செய்து அதில் வெற்றியும் பெறுகிறான். இன்னும் மூன்று திங்கள்களில் நிலக்கிழார் மகன் இறந்துவிடுவான் என்று மருத்துவர்கள் பேசிக்கொண்டது பாண்டிக்கு மட்டுமே தெரியும். நிலக்கிழார் மகன் இறந்த பிறகு கண்ணம்மாவை அடையும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக பாண்டி கணக்கிடுகிறான். நிலக்கிழாரே தன் தங்கையைக் கேட்டு வந்ததால் வடிவேலுக்குத் தலைகால் தெரியவில்லை. "ஊரே உன்னை மெச்சுது... நீ அதுல மண்ணள்ளிப் போட்டுடாதே....," என்று கண்ணம்மாவிடம் அழுது மன்றாடி அவளைத் திருமணத்திற்கு உடன்படுத்துகிறான். கண்ணம்மாவின் திருமணத்தைச் சபைக்கோடியில் நின்றபடி பிச்சைக்காரன் முத்து தன்னிரு கண்களால் காண்கிறான்.

    1980's classics: Ananda Raagam

    தன்மகன் நலம்பெற வேண்டி ஆயிரம் பேர்க்கு அன்னதானமிடும் ஈகை நிகழ்வை நிலக்கிழார் ஏற்பாடு செய்கிறார். அந்தக் கூட்டத்தில் கண்ணம்மாவிடம் சோற்றுக்குக் கையேந்திய இரவலனாக முத்து நிற்பதைப் பார்த்து மயங்கி விழுகிறாள். நிலக்கிழார்க்கு இப்போது நிலைமை விளங்குகிறது. "இந்த வீட்டுக் குலப்பெருமை உன்னிடம்தான் இருக்கிறது...," என்று கண்ணம்மாவிடம் வேண்டுகிறார். "அதற்குக் களங்கம் ஏற்படும்படி என்றும் நடந்துகொள்ளமாட்டேன்...," என்று கண்ணம்மாவும் உறுதியளிக்கிறாள். அதே வீட்டில் ஆளில்லாதபோது கண்ணம்மாவை அடையும் நல்ல வாய்ப்பு வருமென்று பாண்டியும் காத்திருக்கிறான்.

    கடும் காய்ச்சலில் கடற்கரையில் தன்னினைவிழந்து கிடக்கும் முத்தைக் காண்கிறாள் இலட்சுமி. அவனைத் தன்வீட்டுக்கு இட்டுச்சென்று மருத்துவம் பார்க்கிறாள். "கண்ணம்மா கண்ணம்மா...," என்று முத்தின் உதடுகள் துடிக்கின்றன. "இன்னிக்கு இராத்திரிக்கு மேல தாங்காதும்மா... யாரந்தக் கண்ணம்மா... கூட்டிவந்து காட்டிரு... நிம்மதியாகப் போய்ச் சேரட்டும்...," என்று வைத்தியரும் கையை விரிக்கிறார். இலட்சுமி கண்ணம்மாவை அழைக்கச் செல்கிறாள். "நான் உன் சேலையைக் கட்டிட்டி இங்கேயே இருக்கேன்... நீ என் சேலையைக் கட்டிட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்துடு...," என்பது அவள் வகுத்துத் தரும் திட்டம். அதன்படி இலட்சுமியின் சேலையைக் கட்டிக்கொண்டு கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதை மறைந்திருந்து பார்க்கும் பாண்டி நிலக்கிழாரிடம் காட்டிக்கொடுத்து விடுகிறான். இலட்சுமியை அறையும் நிழக்கிழார், "டேய்... பாண்டி... கண்ணம்மாவைத் தேடிப் பிடிச்சு அவன் அண்ணன்கிட்ட விட்டுட்டு வா... நம்மள வெட்டுவேன்னு சொன்னான்ல... முதல்ல அவன் தன்னோட தங்கச்சியை வெட்டட்டும்...," என்று ஏவுகிறார்.

    கண்ணம்மாவை அழைத்து வர இலட்சுமி சென்றிருக்கிறாள் என்று அறியும் முத்து அவ்விடத்திலிருந்து வெளியேறுகிறான். "இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றவள் இந்நேரத்தில் தன்னைக் காண வரக்கூடாது...," என்பது அவன் எண்ணம். அவ்விரவில் மழை கொட்டுகிறது. கண்ணம்மாவைக் கடற்கரையில் இடைமறிக்கிறான் பாண்டி. அவளை அடையும் போராட்டம். கண்ணம்மா தன்னைக் காத்துக்கொள்ளப் போராடுகிறாள். மணலில் புதைந்திருக்கும் கண்ணாடிக் குடுவையை எடுத்து பாண்டியின் மண்டையைப் பிளந்துவிடுகிறாள். அதே கண்ணாடிக் குடுவையைப் பிடுங்கிய பாண்டி கண்ணம்மாவைக் குத்திவிடுகிறான். கண்ணம்மாவின் அலறலைக் கேட்டு அங்கே வருகிறான் முத்து. கடற்கரையில் இருவரும் ஒருவர் மடியில் ஒருவர் விழுந்த நிலையில் சாவைத் தழுவுகிறார்கள்.

    1980's classics: Ananda Raagam

    இவ்வளவு தெளிவாக, இவ்வளவு அழுத்தமாக, இவ்வளவு மனப்போராட்டங்களோடு அமைந்த கதைப்படங்கள் எழுபது எண்பதுகளின் தனிச்சிறப்பு. தமிழ் நாயகர்களில் கதைவளம் மிக்க எண்ணற்ற படங்களில் நடித்தவர் என்று சிவக்குமாரைத்தான் சொல்வேன். பஞ்சு அருணாசலம் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். பரணி என்பவர் இயக்கியிருக்கிறார். அவர் யார் ? பிற்காலத்தில் என்னவானார் ? இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்கள் இப்படத்தில் தேனமுதம் என்றால் படத்தின் பின்னணி இசை தெள்ளமுதம். கண்ணம்மாவைப் பாண்டி நெருங்கும்போதெல்லாம் நம் நெஞ்சாங்கூட்டை உடைக்கும் அதிர்வுகளை இசைக்கிறார் அவர்.

    இந்தக் கதையில் யாரும் குற்றவாளிகள் அல்லர். ஒரு காதல் இந்தச் சமூகத்தின் ஏற்பைப் பெறுவதற்கு என்னென்ன தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது! ஒரு பெண் அன்புக்குத்தான் இளகுவாள். அந்தத் தூய மனத்திற்கு வெவ்வேறு மதிப்பீடுகளைப் புகட்டுவதுதான் உறவுகளின் சமூகத்தின் மிகப்பெரிய வன்முறை. கள்ளங்கபடமில்லாத ஓர் ஏழையின் அகவாழ்வுக்கு இங்கே எவ்வுறுதியும் தரப்படுவதில்லை. உயிரின் பாடலாக ஒயாது ஒலித்துக்கொண்டிருக்கும் காதலின் கீதத்தைப் போன்ற ஆனந்த ராகம் வேறெது?

    English summary
    Magudeswaran remembers the 80's classic Ananda Raagam movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X