சர்கார் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலி
Recommended Video

ஈரோடு: சத்தியமங்கலத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் சர்கார் படம் பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் மகன் தினேஷ் குமார்(18). கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கரின் மகன் சித்திக்(18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சர்கார்
தினேஷ் மற்றும் சித்திக் ஆகியோர் விஜய் ரசிகர்கள் ஆவர். சர்கார் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திட்டமிட்டு ஆசை ஆசையாய் தீபாவளி அன்று புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தியேட்டருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்கள்.

வீடு
காலை 6 மணி காட்சியை பார்த்துவிட்டு காலை 9.45 மணிக்கு அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பினார்கள். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் மாதேஸ்வரன் கோவில் பகுதியில் அவர்கள் வந்தபோது எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தினேஷ் மற்றும் சித்திக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

விபத்து
அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய லாரியின் டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

பெற்றோர்
படம் பார்க்க சென்ற தினேஷ், சித்திக் விபத்தில் பலியான தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து இரண்டு உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இருவரின் பெற்றோரும் கதறி அழுததை பார்த்து அங்கிருந்தவர்களுக்கும் கண்ணீர் வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











