'துபாய் குலுங்க குலுங்க...' - நடுவானில் ரஜினி கொடி பறக்குது!
Recommended Video

துபாய் : '2.ஓ' படத்தின் இசை வெளியீட்டுக்காக துபாயில் படு பயங்கரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் '2.O' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக இன்று நடைபெற இருக்கிறது.
'2.O' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
400 கோடி ரூபாய் செலவில் லைகா நிறுவனம் 2.O' படத்தை உருவாக்கியிருக்கிறது. 2D காட்சிகளை 3D-யாக மாற்றும் வகையில் இல்லாமல் படம் எடுக்கும்போதே 3D கேமரா மூலம் எடுக்கப்பட்டது.

சிறப்பு
இந்த இசை வெளியீட்டில் ஏ.ஆர். ரஹ்மான் லைவ்வாக இசையமைத்து பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காகச் சென்றிருக்கும் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் துபாயில் அமைந்துள்ள உலகின் ஒரே ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலான Burj Al Arab-ல் தங்கியிருக்கின்றனர்.
துபாய் கொண்டாட்டம்
துபாய் '2.O' இசை வெளியீட்டுக்காக வண்ணமயமாகத் தயாராகி இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு துபாய் நகரமே '2.ஓ' நகரமாகத் திகழும். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் நேற்று முன்னோட்டம் நடைபெற்றது. வண்ணமயமான நீர் நடனம் ஒரு புறம், ஆட்டம் பாட்டத்தின் முன்னோட்டம் மறுபுறம் என பிரமாண்ட கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள் குழுவினர்.
10000 அடி உயரத்தில் 2.O
'2.O' உயரத்தில் பறக்கிறது. துபாயின் பாம் ஜுமைராவில் 10000 அடி உயரத்தில் '2.O' விளம்பரத்தோடு ஸ்கை டைவிங் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துபாய் தெறிக்க
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுவதை ஒட்டி, இன்னொரு போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த், எமி ஜாக்ஸன், அக்ஷய் குமார் ஆகியோர் இந்த போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் ரஹ்மானின் இசையில் துபாய் குலுங்கப் போகிறது.


Click it and Unblock the Notifications











