இந்தியன் 2 படம் பார்த்து ஸ்ட்ரெஸ் ஆகிவிட்டதா?.. மசாஜுக்கு சலுகை.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
கரூர்: கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியானது இந்தியன் 2 திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்துக்கு மோசமான விமர்சனங்களே கிடைத்தன. இந்தச் சூழலில் கரூரில் இருக்கும் ஒரு அழகு நிலையம் விநோதமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த கமல் ஹாசன்; விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து கிடப்பில் கிடந்த இந்தியன் 2 பட பணிகள் மீண்டும் தூசு தட்டப்பட்டன. அதன்படி உள்நாடு, வெளிநாடு என பல இடங்களில் ஷூட்டிங் முடிந்து கடந்த 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்போடு படமானது திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே வெளியான இந்தியன் க்ளாசிக் படமாக இன்றுவரை கொண்டாடப்படுவதால் இந்தியன் 2வை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

மோசமான விமர்சனம்: ஆனால் ரசிகர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தியனை அப்படியே விட்டிருக்கலாம் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் கமல் ஹாசனின் மேக்கப்பெல்லாம் ஒட்டவே இல்லை; ஏனோதானோவென்று எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ்களையும், மீம்ஸ்களையும் பறக்கவிட்டுவருகின்றனர் நெட்டிசன்ஸ்.
என்ன பிரச்னை: இந்தியன் 2வின் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவது ஷங்கரின் மேக்கிங்கும், எடுபடாத வசனங்களும்தாம். ஏனெனில் படத்தின் முதல் பாகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் வசனம் பெரும் பங்காற்றியது. சிறு சிறு வசனங்களில் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை நீக்க முடியாதது. ஆனால் இந்தியன் 2வில் அப்படி ஒரு வசனம்கூட இல்லை. அதேபோல் மக்கள் கூட்டத்தை கூட்டி ஒரு காட்சியை எடுத்தால் போதும் பிரமாண்டமாகிவிடும் என்று ஷங்கர் நினைத்துவிட்டார்போல; திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் சுவாரசியமே இல்லை என்பதும் பலரின் விமர்சனமாக இருக்கிறது.
ஷங்கர் மாறவே இல்லை: முக்கியமாக ஷங்கரின் ஐடியாலஜி மீதும் கடுமையான விமர்சனத்தை ரசிகர்கள் வைக்கிறார்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஷங்கர் ஊழல், லஞ்சம் என்ற டெம்ப்ளேட்டை தூக்கிக்கொண்டு சுற்றுவார் என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றனர். அதேபோல் அனிருத்தின் இசையையும் இந்தியனில் ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட இசையுடன் கம்ப்பேர் செய்து அடித்து துவைத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியன் 2 படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை பெறவில்லை.
விநோத அறிவிப்பு: இந்நிலையில் கரூரில் அழகு நிலையம் ஒன்று விநோத அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கரூர் மாவட்டம் தாந்தோணி மலையில் இருக்கும் Studieó 9 Family Saloon And Bridal Studio என்ற அழகு நிலையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இந்தியன் 2 படத்துக்கு சென்று மன அழுத்தம் அதிகரித்தவர்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடியில் head Massage செய்யப்படும் என்றும்; அப்படி செய்துகொள்ள வருபவர்கள் இந்தியன் 2 படம் பார்த்ததற்கு ஆதாரமாக டிக்கெட்டை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











