மௌனம் பேசியதே 20 ஆண்டு நிறைவு..திரைக்கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி..அமீர் உருக்கமான அறிக்கை!
சென்னை : மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்தை அடுத்து இயக்குநர் அமீர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் அமீர், மௌனம் பேசியதே, ராம், ஆதிபகவன், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இந்த படங்கள் மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடத்தை பிடித்துள்ளன.
இயக்குநராக இருந்த அமீர் யோகி படத்தில்,லீட் ரோலில் நடித்தார். இதையடுத்து வடசென்னை படத்தில் ராஜன் எனற கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து பெயர் எடுத்தார்.

மௌனம் பேசியதே 20 ஆண்டு நிறைவு
சூர்யா நடிப்பில் த்ரிஷா கதாநாயகியாக நடித்த திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படம் 2002ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்பட வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இயக்குநர் அமீர் ஒரு உருக்கமான நெகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

மகிழ்ச்சி அடைகிறேன்
சாதாரணமாக மதுரையில் இருந்த அமீர் இன்றைக்கு அறியப்பட்ட - வாழ்த்தப் பெற்ற ஒரு ஆளாக உங்கள் முன் நிற்பதற்கான தொடக்கம் - திரைக்கலைஞன் என்னும் அடையாளம் தான். அந்த அடையாளத்தைப் பெற்றுத் தந்த என்னுடைய முதல் திரைப்படம் "மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கனவும் நனவாவது
சென்னையை நோக்கி சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு.கணேஷ் ரகு மற்றும் திரு.வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும்,

அனைவருக்கும் நன்றி
நான் இயக்குனராவதற்கு உறுதுணையாக இருந்த நடிகர் திரு.சூர்யா அவர்களுக்கும், என்னோடு பயணித்து வெற்றிக்கு கரம் கொடுத்த ஒளிப்பதிவாளர் திரு.ராம்ஜி மற்றும் திரு.யுவன் ஷங்கர் ராஜா, கவிஞர் சினேகன் உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு என் நன்றிகள்.

உருக்கமான அறிக்கை
என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 20 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும், குறிப்பாக "மௌனம் பேசியதே" ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என இயக்குநர் அமீர் மனம் உருகி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











