2023 Year Ender: அஜித் முதல் சிவகார்த்திகேயன் வரை... 2023 பாக்ஸ் ஆபிஸில் கம்பேக் கொடுத்த ஹீரோக்கள்!
சென்னை: கோலிவுட்டில் 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர், லியோ, துணிவு, பொன்னியின் செல்வன் 2, வாத்தி, மாவிரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றன. அதேபோல் சின்ன பட்ஜெட்டில் உருவான படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில், 2023ம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் கம்பேக் கொடுத்த ஹீரோக்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
2023 பாக்ஸ் ஆபிஸில் கம்பேக் கொடுத்த ஹீரோக்கள்
கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் 2023ம் ஆண்டு தான் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்திலேயே விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகின. இந்த இரண்டுமே கோலிவுட்டில் சூப்பரான பாக்ஸ் ஆபிஸ் வசூலை தொடங்கி வைத்தன. அதன்படி இந்தாண்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் மூலம் சில ஹீரோக்கள் கம்பேக் கொடுத்துள்ளனர்.

இந்த வரிசையில் முதலில் இருப்பது கோலிவுட் மாஸ் ஹீரோ அஜித் தான். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான வலிமை எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இதனையடுத்து மீண்டும் அஜித் - ஹெச் வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்தது. அதன்படி இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் செம்ம மாஸ்ஸாக ரீ-என்ட்ரியாகியுள்ளார் அஜித்.
அதேபோல் தனுஷுக்கும் 2023ம் ஆண்டு ஸ்பெஷலாக அமைந்துள்ளது. கடந்தாண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் தடுமாறியது. அதனை ஈடு செய்யும் விதமாக இந்தாண்டு வெளியான தனுஷின் வாத்தி, 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. இதனால் தனுஷ் பாக்ஸ் ஆபிஸில் கம்பேக் கொடுத்துள்ளார்.
தனுஷுக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனுக்கு இந்தாண்டு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. கடந்தாண்டு சிவா நடிப்பில் டான், பிரின்ஸ் படங்கள் வெளியாகின. இதில் 2022 தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியடைந்தது. இதனால் துவண்டு கிடந்த சிவாவுக்கு இந்தாண்டு வெளியான மாவீரன் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், விஷாலுக்கும் 2023ம் ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது. முன்னதாக அவர் நடிப்பில் வெளியான எனிமி, லத்தி படங்கள், ரிலீஸான அதே வேகத்தில் தியேட்டரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டன. இதனால் தோல்வி மேல் தோல்வியை சந்தித்த விஷால், மார்க் ஆண்டனி படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் கம்பேக் கொடுத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்த லிஸ்ட்டில் ராகவா லாரன்ஸும் இடம்பெற்றுள்ளார். வழக்கமாக பேய் காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை சோதித்து வந்த ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். 2023 தீபாவளிக்கு ரிலீஸான ஜிகர்தண்டா, விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











