வினியோகஸ்தர்களுடன் மோதல்: 40 தியேட்டர்கள் மூடல்!
சேலம் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 40க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூட்டப்பட்டன.
புதிய திரைப்படங்களை அவற்றின் பட்ஜெட் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்பு கட்டுப்பாடு விதித்திருந்தது.
இதைப் பயன்படுத்தி சேலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் புதிய படங்களை திரையிடுவதில் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பதாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.
புதிய படங்கள் திரையிட திரையரங்குகளை குலுக்கல் முறையில விநியோகஸ்தர்கள் தேர்வு செய்வதாகவும் கூறப்பட்டது.
இதனை எதிர்த்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு, ஆத்தூர் பகுதிகளில் கடந்த 15-ந் தேதி முதல் 40 திரைரங்குகளை மூடிவிட்டனர் உரிமையாளர்கள்.
இதனால் சமீபத்தில் வெளியான கோடை சீஸன் படங்களை இந்தப் பகுதிகளில் மட்டும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது. சங்கத்தின் தலைவர் ராம.நாராயணன் முன்னிலையில் சேலம் வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதற்கிடையே, பட்ஜெட் அடிப்படையில் படங்களை வெளியிட வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனையை இந்த சீஸனுக்கு மட்டும் விலக்கி்க் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











