நடிகர் சங்க உறுப்பினராக கெடு நீட்டிப்பு!

ரஜினி, கமல் உள்பட நடிகர் சங்கத்தில் தற்போது 3,000 உறுப்பினர்கள் உள்ளனர். நாடக நடிகர்களும் இதில் அடக்கம்.
தமிழ் படங்களில் அறிமுகமாகும் மும்பை மற்றும் தெலுங்கு நடிகர், நடிகைகள் பலர் நடிகர் சங்கத்தில் உறுப்பினராவதில்லை. இரண்டு மூன்று தமிழ்ப் படங்களில் நடித்த பிறகும் கூட பலர் உறுப்பினர் அட்டை பெறுவதே இல்லையாம்.
பிரபல நடிகை ஜெனிலியா, சந்தோஷ் சுப்பிரமணியம் ரிலீசுக்குப் பிறகுதான் உறுப்பினரானார், அதுவும் சங்கத்தால் எச்சரிக்கப்பட்ட பிறகு!.
இந் நிலையில், நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என சங்க பொதுக்குழுவில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து வாரணம் ஆயிரம் பட நாயகி சமீரா ரெட்டி, நடிகை சோனா, சுப்பிரமணியபுரம் பட கதாநாயகன் ஜெய் ஆகியோரும் சமீபத்தில் உறுப்பினர்களாகியினர்.
நடிகர், நடிகைகளுக்கான சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நடிகர் சங்கம் தலையீட்டு தீர்த்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதத்துக்குள் உறுப்பினராகாதவர்கள் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பல நடிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த காலக்கெடு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications