வடிவேலு மீது வழக்கு-விஜயகாந்த் உதவியாளர் மனு

சென்னை சாலிகிராமத்தில் உள்ளது நகைச்சுவை நடிகர் வடிவேலு வீடு. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அவரது வீட்டை ஒரு கும்பல் கற்களால் அடித்து நொறுக்கியது. இது போலீசில் புகார் செய்தார் நடிகர் வடிவேலு உதவியாளர் மாரிமுத்து.
இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேமுதிகவைச் சேர்ந்த 13 பேரைக் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை பெருநகர 9வது கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று மாஜிஸ்திரேட்டு பெஞ்சமின் ஜோசப் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நடிகர் வடிவேலு உள்பட 4 பேரும் சாட்சியளிக்க வரவில்லை.
இந் நிலையில் நடிகர் விஜயகாந்த் உதவியாளர் சதீஷ்குமார் சார்பில் அவரது வக்கீல் நமோநாராயணன் 2 மனுக்களை தாக்கல் செய்தார்.
அதில், சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், நடிகர் வடிவேலு மீது வழக்கு தொடர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை சதீஷ்குமார் உள்பட 13 பேர் மீதான வழக்கு விசாரணையை நடத்தக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு அரசு தரப்பு வக்கீல் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சதீஷ்குமார் மனு மீது பதில் மனுவை தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீலுக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். வழக்கு வருகிற 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











