அவரு இல்லாம இங்க ஒன்னும் பண்ண முடியாது.. அமித் ஷாவுக்கு தக் லைஃப் கொடுத்த லப்பர் பந்து இயக்குநர்
சென்னை: 22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழா நேற்றுடன் நடைபெற்று முடிந்தது. கடந்த 12ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வந்த இந்த திரைப்படத் திருவிழாவின் இறுதி நாளில், சிறந்த படங்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலருக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் இரண்டாவது சிறந்த படம் என்ற விருதினை வாங்கிய, லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியதற்கு, தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சிகள் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் எனக் கூறிக்கொண்டே உள்ளனர். அம்பேத்கர் பெயரை சொன்னதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நாட்டின் அரசிலமைப்புச் சட்டத்தை நிறுவிய, அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக, உள்துறை அமைச்சரின் பேச்சு இருப்பதாக, நாடெங்கிலும் கண்டனம் எழுந்தது.

இதன் காரணமாக, எதிர்க்கட்சியினர், நேற்று முன் தினம், அவை நடவடிக்கைகளை முடக்கினர். இதுமட்டும் இல்லாமல், நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட, பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீல நிற உடை அணிந்து, இந்திய அரசியல் சட்டத்தை நிறுவிய, அம்பேத்கரின் புகைப்படத்தைக் கையில் எடுத்துச் சென்றனர்.மேலும் அவையில் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக முழக்கமிட்டு, அவை நடவடிக்கைகளை முடக்கினர்.
அம்பேத்கர்: இப்படியான நிலையில், சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில், இரண்டாவது சிறந்த படம் என்ற விருதினை வாங்கிய லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ” அம்பேத்கர் இல்லாமல், இங்கு எதுவும் இல்லை. அவரில்லாமல் இங்கு எதுவும் நடக்காது. இங்கு எல்லாம் இயங்கவே அவர்தான் காரணம். அவரைப் புறக்கணித்துவிட்டோ, அவர் இல்லாமலோ எதுவும் செய்துவிடமுடியாது. இப்போது, தான் கூறிய கருத்தினை தான், கூறவில்லை என அமித்ஷா கூறியுள்ளாரே, அதுதான் அம்பேத்கர் (சிரிக்கின்றார்). அம்பேத்கர் வந்துடுவாரு. நான் அவருடைய ரசிகன், பக்தன் என எதுவேண்டுமானாலும் சொல்லலாம்” எனக் கூறினார்.
கூடுதல் பொறுப்பு: முன்னதாக, லப்பர் பந்து படத்திற்காக விருது பெற்றது குறித்த கேள்விக்கு, “ நான் இயக்கிய முதல் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. எனக்கும் இதுதான் முதல் விருது, அது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கிடைத்ததற்கு மகிழ்ச்சி. ஓடிஓடி படம் பார்த்த இடத்தில் விருது கிடைத்திருப்பது கூடுதல் பொறுப்பு. ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது” என பதில் அளித்தார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. லப்பர் பந்து படத்தினை இரண்டாவது சிறந்த படம் எனவும், படத்தில் நடித்த கெத்து தினேஷுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











