நடிகர்கள் மீதான அவதூறு வழக்கு: கோவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
கோவை: பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியதாக விவேக், சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 நடிகர்கள் மீது பத்திரிகையாளர் தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.
பத்திரிக்கையாளர் ஆர். வேலுசாமி சார்பாக வழக்கிறஞர் ஆர். லக்ஷ்மண நாராயணா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இம்மனுவில், சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கை வெளியிட்ட செய்தியைக் கண்டித்து நடந்தக் கூட்டத்தில் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், விஜயகுமார், சூர்யா, அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிக்கையாளர்கையும், அவர்களின் குடும்பத்தினரையும் ஆபாசமான வார்த்தைகளைக் கூறி பேசியது மட்டுமின்றி, தடை செய்துவிடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளனர்.
நான் சார்ந்த பத்திரிக்கைச் சமூகத்தினர் மீது திரைப்படத் துறையினர் இப்படி அவதூறாகப் பேசியதால் மன வருத்தம் அடைந்த வேலுச்சாமி, நடிகர், நடிகைகள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294 பி (பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளைப் பேசுதல்), 506 துணைப் பிரிவு 2 (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல் செய்வது) ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடர வேண்டும், என்று வேலுச்சாமி சார்பில் அவரது வழக்கறிஞர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது வழக்குக்கு ஆதாரமாக வீடியோ பதிவுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஸ்ரீ செல்லப் பாண்டியன், வரும் 29ஆம் தேதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு!
பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியதாகத் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அவதூறாகப் பேசிய நடிகர், நடிகைகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதையடுத்து வரும் 26-ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை கோர்ட்டிலும் நடிகர் - நடிகைகள் மீது 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











